தமிழ் சினிமா நடிகையும், பாடகியுமான பரவை முனியம்மா உடல்நலக் குறைவால் காலமானார்.
83 வயதான பரவை முனியம்மா, கிராமியப் பாடல்கள், பக்திப் பாடல்கள், கருப்பசாமி பாடல்களைப் பாடியவர். அவருடையப் பாடல் இல்லாத, கோயில் திருவிழாக்களே இருக்காது. அப்படிப் பாடிய அசத்தியவர், தமிழ் சினிமாவிலும் ஒரு கலக்கு கலக்கினார்.
சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி என்ற தூள் பாடல் மூலம், சினிமாவில் அறிமுகமாகி 80க்கும் மேற்பட்ட படங்களில், பாடியும் நடித்தும் அசத்தியுள்ளார். கடைசியாக 2014ம் ஆண்டு வெளிவந்த மான்கராத்தே படத்தில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருந்தார்.
பின்னர், திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த அவர், உடல்நலக்குறைவால் வீட்டில் இருந்தபடியே சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை 2.30 மணியளவில் அவர் இயற்கை எய்தினார். அவருடைய மறைவிற்கு, பலரும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.