தல அஜித் குமாரைத் தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இல்லை. அந்த அளவிற்கு, அவர் மிகப் பிரபலமான முன்னணி நட்சத்திரம். பெரும்பாலும், எவ்வித அரசியலும் பேசாதவர். கூட்டங்களிலும், மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாதவர்.
அவருடைய வீட்டிற்கு, இன்று திடீரென வனத்துறையினர் சென்று சோதனையில் ஈடுபட்டனர். செய்தித் தாள் ஒன்றில், அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, மலைப் பாம்பு ஒன்றினை வளர்த்து வருவதாக செய்தி வெளியானது.
இதனை அறிந்த வேளச்சேரி பகுதியில் அமைந்துள்ள வனத்துறை அதிகாரிகள், சுரேஷ் சந்திரா வீட்டிற்குச் செல்ல முடிவு செய்தனர். ஆனால், அவருடைய விலாசம் சரியாகத் தெரியாத காரணத்தால், அவருடைய ஆஸ்தான நடிகரான அஜித்குமாரின் வீட்டிற்குச் சென்றனர். அங்கு அஜித்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் இல்லை. அவர்கள், தங்களுக்குச் சொந்தமான பனையூர் பங்களாவிற்குச் சென்றிருந்தனர்.
இதனையடுத்து, திருவான்மீயூரில் உள்ள அஜித் வீட்டில், சுரேஷ் சந்திராவின் முகவரியினைப் பெற முயற்சி செய்துள்ளனர். வீட்டில், பணியாட்கள் மட்டுமே இருந்துள்ளதால், அவர்கள் மீண்டும் திரும்பி வந்துள்ளனர். இச்சம்பவம், தற்பொழுது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.