மேலும் 4 நிறுவனங்களை விற்க முடிவு! இந்தியாவின் எதிர்காலம்?

21 November 2019 அரசியல்
nirmalaseetharaman.jpg

ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் போன்ற அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைத் தொடர்ந்து, மேலும் நான்கு நிறுவனங்களை விற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பொருளாதார மந்தநிலை காரணமாக ஆட்டோமொபைல் துறை, ஐடி துறை, தொலைத்தொடர்புத் துறை ஆகியவைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. பல லட்சம் பேர் தங்களுடைய வேலைகளை இழந்து வருகின்றனர். புதிய வேலைவாய்ப்புகளுக்கேப் பற்றாக்குறை என்ற நிலையில், இருக்கின்ற வேலைகளும் மூடப்படுவதால் சாமனிய மக்களின் வாழ்க்கை, மிகுந்த சிரமம் மிகுந்ததாக தற்பொழுது மாறியுள்ளது.

ஏற்கனவே, நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்தினை வரும் மார்ச் 2020ல் விற்க உள்ளதாக, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இந்நிலையில், பாரத் பெட்ரோலியம் உட்பட மேலும் நான்கு நிறுவனங்களை விற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பிபிசிஎல் எனப்படும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், எஸ்.சி.ஐ எனப்படும் இந்திய கப்பல் போக்குவரத்து மற்றும் கான்கார் எனப்படும் இந்திய சரக்குப் பெட்டக கழகம் ஆகியவை அடுத்ததாக தனியார் கைவசம் ஒப்படைக்கப்பட உள்ளன.

அரசு நிறுவனங்களின் வருவாய் கணிசமாக குறைந்துள்ளதால், அதனை அதிகரிக்கும் பொருட்டு, இந்த முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதற்கான முடிவினை, மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுத்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பிபிசிஎல் நிறுவனத்திற்குச் சொந்தமான 53.29 சதவீத பங்குகள், மத்திய அரசிடம் உள்ளன. அவைகளை விற்க தற்பொழுது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், பிபிசிஎல் நிர்வாகமானது முற்றிலும் தனியாரிடம் தாரைவார்க்கப்பட உள்ளது. மேலும், எஸ்.சி.ஐ நிறுவனத்தின் பங்குகள் சுமார் 63.75 சதவீதம் மத்திய அரசிடம் உள்ளன. அதில், 53.75 சதவீத பங்குகளையும், கான்கார் நிறுவனத்தின் 54.80% பங்குகளில், 30.9 சதவீத பங்குகளையும் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதனால், இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனங்கள் தனியார் மயமாக உள்ளது புலனாகின்றது. ஏற்கனவே, ரயில்வே துறையில், தனியார் ரயில் ஓட ஆரம்பித்து விட்டது. விரைவில், தனியார் ரயில்கள் இந்தியா முழுவதும் ஓடுவதற்குத் தேவையான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டுமே, தற்பொழுது பொதுத்துறை நிறுவனங்களில், தப்பித்து நிற்கும் மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS