ப்ரோஷன்-2 திரைவிமர்சனம்!

27 November 2019 சினிமா
frozen2.jpg

சரியாக ஆறு ஆண்டுகள் கழித்து, ப்ரோஷன்-2 திரைப்படம் வெளியாகி உள்ளது. உலகின் அனைத்து பகுதிகளிலும் வெற்றிப் பற்ற ப்ரோஷன் படத்தின் தொடர்ச்சியாக, இப்படம் உருவாக்கப்பட்டு உள்ளது.

படத்தின் கதை மிக சுவாரஸ்யமானது. பொதுவாக, டிஸ்னி உருவாக்கும் படங்கள் அனைத்துமே, மிகத் தெளிவாகவும், பார்ப்பதற்கு ஒருவித குளிர்ச்சியினை கண்களுக்கு வழங்கும் நிறத்திலும் உருவாக்கப்படும். இந்தப் படமும் அந்த விதத்தில் தான் உருவாக்கப்பட்டு உள்ளது. சரி, படத்தின் கதைக்கு வருவோம்.

அரண்டெல் நகரத்தின் மந்திர சக்தியுள்ள இளவரசியான, எல்சா மற்றும் அவரது சகோதரி அன்னாவிடம் குழந்தையாக இருக்கும் பொழுது, அவர்களைத் தூங்க வைப்பதற்காக, அவர்களுடையத் தந்தையும், அரண்டெல் நகர அரசருமான அக்னார் ஒரு கதை சொல்கிறார். அந்தக் கதையில், நார்த்துல்டிரா காட்டில் வசிக்கும் மக்களைப் பற்றியும், அவர்களுக்கும் இந்த அரசிற்கும் உள்ள தொடர்பு பற்றியும் கூறுகின்றார். இந்தக் கதையினைக் கேட்டே, சகோதரிகள் இருவரும் வளர்கின்றனர்.

காலம் கழிகின்றது. இருவரும் வளர்ச்சி அடைகின்றது. அப்பொழுது, இளவரசி எல்சாவின் காதுகளுக்கு ஒரு மர்மமான குரல் கேட்கின்றது. அந்த குரலைத் தொடர்ந்து பின்தொடரும் எல்சா, அதனுடன் பேச முயற்சிக்கின்றார். திடீரென்று சில மரணங்கள், எதிர்பாராதா சம்பவங்கள் நடைபெறுகின்றன.

யாரும் எதிர்பாராத வகையில், அமைதியாக இருந்த பஞ்ச பூதங்களை எழுப்பி விடுகின்றார் எல்சா. அதனால், அமைதியாக வாழ்ந்து வந்த நார்த்துல்டிரா காட்டு மக்கள் என்ன ஆனார்கள். எல்சா எப்படி பிரச்சனைகளை சரி செய்தாள். அவளுக்குக் கேட்ட அந்த மர்மக் குரல் யாருடையது. அவளுடைய சக்தி என்ன ஆனது என, படத்தில் கச்சிதமான கதையுடன் படத்தினை உருவாக்கி உள்ளனர்.

இந்தப் படத்தினைப் பார்க்கும் குழந்தைகள் அனைவருமே, கொண்டாடும் வகையிலேயே இந்தப் படத்தினை உருவாக்கியுள்ளனர். முழுக்க முழுக்க அனிமேஷன் படமாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகி உள்ளது.

படத்தில் நம்மை சிரிக்க வைப்பதற்காகவே, ஓலப் என்ற பனிமனிதன் இருக்கின்றான். அவன் போதும், இந்தப் படத்தினை நாம் ரசிப்பதற்கு, எவ்வித லாஜிக்கும் எதிர்பார்க்காமல் செல்லும் அனைவருக்கும், இந்தப் படம் நல்லதொரு மேஜிக்காக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

திரைவிமர்சகர்கள், இந்தப் படத்திற்குப் பலவிதமான கலவையான ரேட்டிங் அளித்திருந்தாலும், இந்தப் படத்தினை பார்க்கும் மக்கள் மகிழ்வுடனும், திருப்தியுடனும் வீடு திரும்புகின்றனர். மொத்தத்தில் ப்ரோஷன்-2 நம்மை மாய உலகில் உறைய வைக்கின்றது.

ரேட்டிங் 3.7/5

HOT NEWS