இந்த மாதத்தில் மட்டும் 2வது முறையாக, சமையல் எரிவாயுவின் விலையானது உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் 5வது முறையாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்தியப் பொருளாதாரம், மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகின்றது. இந்த சூழலில் கொரோனா பாதிப்பு காரணமாக, ஊரடங்கு உத்தரவானது அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைக்கானப் பணத்திற்கே, சமானிய மக்கள் கடுமையான போராட்டத்திற்கு ஆளாகினர். சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் மதிப்பானது குறைந்த போதிலும், இந்தியாவில் மட்டும் பெட்ரோல் மட்டும் டீசல் விலையானது கூடிக் கொண்டே இருக்கின்றது.
இந்த சூழலில், அதற்கு போட்டியாக கேஸ் சிலிண்டர் விலையும் கடுமையாக உயர்ந்து வருகின்றது. இந்த ஆண்டு மட்டும் சுமார் 5 முறை இதன் விலையானது உயர்த்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் தற்பொழுது மானிய விலையில், 14.2 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதற்கு மேல் தேவைப்படும் பட்சத்தில், மானியம் இல்லாத சந்தை விலையில் விற்கப்படுகின்ற சிலிண்டர்களை வாங்கிக் கொள்ளலாம். இந்தியாவில் தினமும் 30 லட்சம் கேஸ் சிலிண்டர்கள் விற்பனையாகி வருகின்றன.
இந்த சூழலில், மானியம் இல்லாத சிலிண்டரின் விலையானது தற்பொழுது 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 710 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. இந்த டிசம்பர் மாதத்தின் துவக்கத்தில் 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 660 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், மேலும் சர்வதேச சந்தையினைக் காரணம் காட்டி, சிலிண்டர் நிறுவனங்கள் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளன. இதனால், சாமானிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.