குரூப் 2 தேர்வில், புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு, தமிழகம் முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியது. திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான முக ஸ்டாலின் உட்பட, பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்நிலையில், குரூப் 2 தேர்வின் மெயின் எக்ஸாம் எனப்படும், முதன்மைத் தேர்வில் சில மாற்றங்களைச் செய்துள்ளது டிஎன்பிஎஸ்சி. அதன் படி, இந்த மெயின் தேர்வு இரண்டு தாள்களாகப் பிரிக்கப்பட உள்ளது. முதல் தாளில், தமிழ் மொழி, இலக்கியம், தமிழ் மரபு சார்ந்த கேள்விகள் கேட்கப்படும் என கூறியுள்ளது. சுமார் 100 மதிப்பெண்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இந்தத் தேர்வில் 100க்கு குறைந்தது 25 மதிப்பெண்களாவது எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் தான், இரண்டாம் தாள் திருத்தப்பட்டு மதிப்பீடு செய்யப்படும் என, டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
மேலும், முதல் தாளானது, இரண்டாவது தாளைத் திருத்துவதற்கு மட்டுமேப் பயன்படும் என்றும், அது பணி நியமனத்திற்குப் பயன்படாது எனவும் கூறியுள்ளது. இரண்டாம் தாளின் மதிப்பெண்ணைப் பொறுத்தே, பணி நியமனம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.