ஜிஎஸ்டி குறைக்கப்பட உள்ளதால், இரு சக்கர வாகனங்களின் விலையானது, குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா முழுக்க ஜிஎஸ்டி வரி விதிப்பானது அமலில் உள்ளது. இதனால், பொருட்களின் மீதான வரியானது 5 முதல் 50 சதவிகிதம் வரை உள்ளது. குறிப்பாக, ஆடம்பரப் பொருட்களின் விலையானது, அதிகளவிலேயே உள்ளது. இதனைக் குறைக்க வலியுறுத்திப் பலரும் தங்களுடையக் கோரிக்கையினை முன் வைத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், இந்தியா முழுக்க ஊரடங்கு காரணமாக, கடும் பொருளாதார மந்த நிலையானது ஏற்பட்டு உள்ளது.
இதனால், ஜிஎஸ்டி கவுன்சிலானது, தற்பொழுது ஆலோசனைகளை பெற்று வருகின்றது. அதில், வாகனங்களின் மீதான வரியினைக் குறைப்பதன் மூலம், வாகன விற்பனையினை அதிகரிக்க இயலும் என்றுக் கூறப்பட்டது. இதனை ஜிஎஸ்டி கவுன்சிலும் ஏற்றுக் கொண்டது. இது குறித்துப் பேசியுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இரு சக்கர வாகனங்கள் ஆடம்பர வாகனங்கள் இல்லை என்றுக் கூறியுள்ளார்.
அவை அத்தியாவசிய வாகனங்கள் எனவும், அதன் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். ஹீரோகார்ப் உள்ளிட்ட இந்திய மோட்டார்சைக்கிள் தயாரிக்கும் நிறுவனங்கள் பலவும், 150சிசி பைக்குகள் மீதான ஜிஎஸ்டி வரியினை, 18 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். தற்பொழுது 28% ஜிஎஸ்டி வரியாக விதிக்கப்படுகின்றது.
இந்த ஜிஎஸ்டி வரியானது குறைக்கப்பட்டால், இரு சக்கர வாகனங்களின் விலையானது, 8,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையிலும் குறைக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.