குஜராத்தில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்! விவசாயிகள் போராட்டம்!

27 December 2019 அரசியல்
gujaratlocust.jpg

காப்பான் படத்தில் ஒரு காட்சி வரும். அதில், வெட்டுக்கிளிகள் கூட்டமாக ஒரு கிராமத்தினைத் தாக்கும். பின்னர், அங்குள்ள தாவரங்கள், பயிர்கள் என அனைத்தையும் நாசம் செய்துவிடும். அது போன்ற ஒரு சம்பவம் தற்பொழுது, பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.

பானாஸ்கந்தா என்ற மாவட்டத்தில் விவசாயிகள் தங்களுடையப் பயிர்களை விதைத்துள்ளனர். அவைகளும் வளர்ந்து வருகின்றன. இந்நிலையில், திடீரென்று வெட்டிக்கிளிகளின் படையானது, அம்மாவட்டத்தில் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. அந்த மாவட்டத்தில் உள்ள விவசாய நிலைகளில் ஒரு இடம் விடாமல், அனைத்து இடங்களிலும் இந்த வெட்டுக் கிளிகள் ஆக்கிரமித்து உள்ளன.

இவைகளை விரட்டுவதற்கு, மாவட்ட நிர்வாகம் மருந்து தெளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த முடியாததால் எரிச்சலை உருவாக்கும் சப்தங்களை உருவாக்குங்கள் என, விஞ்ஞானிகள் கூறியிருக்கின்றனர். இதனை முன்னிட்டு, விவசாயிகள் தங்களுடையத் தோட்டங்களில், பெரிய அளவில் சப்தங்களை உருவாக்கி வருகின்றனர்.

இது பற்றிப் பேசியுள்ள குஜராத்தின் துணை முதல்வர் நிதின் பட்டேல், இந்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தானில் இருந்து, பாலைவனத்தின் வழியாக நுழைந்துள்ளன. இவைகளைக் கட்டுப்படுத்துவற்கு, போர்க்கால அடிப்படையில், நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். பானாஸ்கந்தா மாவட்டத்தில் கிட்டத்தட்ட 5,000 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெட்டுக் கிளிகள் 30 முதல் 35 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வெகுவாகக் காணப்படுகின்றன.

விமானங்களைப் பயன்படுத்தி, மருந்துகளைத் தெளிக்க அரசாங்கம் ஏற்பாடு செய்து வருகின்றது. ஆனால், அவ்வாறு செய்தால் அது மற்ற உயிரினங்களை பாதிக்கும் என்பதால், வேறு வழிகளை யோசித்து வருகின்றோம். அந்த வெட்டுக் கிளிகள் வேறு இடத்திற்குப் பரவாமல் இருக்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, உரிய நஷ்ட ஈடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

HOT NEWS