தர்மபிரபு வெளியாகி இரண்டு வாரம் கழித்து, இந்த கூர்கா திரைப்படம் வெளியாகி உள்ளது. இரண்டிலும், நம்ம யோகி பாபு தான் நாயகன். சின்னச் சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த பாபுவுக்கு, இவ்வளவு பெரிய கதாப்பாத்திரங்கள் வழங்கப்பட்டாலும், அவர் திறமைக்கு வழங்கலாம் என்று தான் தோன்றுகிறது. சரி, படத்திற்கு வருவோம்!
பகதூர் பாபு என்ற கதாப்பாத்திரத்தில், நடிகர் யோகி பாபு கூர்காவாக நடித்திருக்கும் திரைப்படம் கூர்கா. நேபாளில் இருந்து சென்னைக்கு வருகிறார். இங்கு போலீஸில் சேருவதற்கு, தேர்வு எழுதுகிறார். வேறு வழியின்றி, தன்னுடைய தாத்தாவைப் போல இவரும் கூர்காவாக மாறுகிறார். ஒரு மாலில் வேளை செய்கிறார்.
சென்னைக்கு வெளிநாட்டுப் பெண் மார்க்கோட் வருகிறார். அவரை நம்ம யோகி வழக்கம் போல, இம்பிரஸ் செய்ய முயற்சிக்கிறார். மார்க்கோட் போல கூர்க்காக்களும் மாலில் உள்ளனர். அவர்கள் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிக் கொள்கின்றனர். அவர்கள் எவ்வாறு, தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிக்கின்றனர். மார்க்கோட் யார், யோகி பாபு என்ன செய்தார் என்பது தான், படத்தின் கதை.
சும்மா சொல்லக்கூடாது. தர்மபிரபுவில் விட்டதை, கூர்காவில் பிடித்துவிட்டார் என்றுதான் கூற வேண்டும். அந்த அளவிற்குப் படம் முழுக்க யோகி பாபு அதகளம் செய்கிறார். மார்காட்டை, மார்க்கெட் என அழைக்கும் பொழுது, தியேட்டரே சிரிக்கிறது. படம் முழுக்கப் பல முன்னணி கதாப்பாத்திரங்கள் வந்தாலும், அவைகளும் நம்மை சிரிக்கவே வைக்கின்றன. இதுவும் ஹாலிவுட் படமான மால் காப் அண்ட் தி டை ஹார்ட் சீரிஸ் படத்தினைத் தழுவிய ஒன்று தான்.
எல்லாவற்றையும் மறந்து, ஒரு இரண்டரை மணி நேரம், மிக ஜாலியாக, மகிழ்ச்சியாக இருக்க விரும்புபவர்கள், இந்த கூர்கா படத்தினைப் பார்க்கலாம்.