கேரளாவில் கனமழைப் பெய்யும் எனவும், அங்குள்ள 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
கேரளாவில் தற்பொழுது தென் மேற்குப் பருவமழையானது, தீவிரமாகப் பெய்து வருகின்றது. அங்குள்ள நீர் நிலைகளும், அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. அங்கு பெய்து வரும் கனமழையால், குன்னூர் எஸ்டேட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதே போல், கனமழையின் காரணமாக மிகப் பெரிய விமான விபத்தும் ஏற்பட்டது.
கடந்த ஜூன் 1ம் தேதி ஆரம்பித்த இந்தப் பருவ மழையால், திருவனந்தபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்த்து மொத்தம் 36க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். அங்கு அடுத்த 5 நாட்களுக்கு கடுமையான மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து, அது வெளியிட்டுள்ள அறிக்கையில், பந்தனம், திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், ஆழப்புழா, திரிச்சூர், பாலக்காடு, காசர்கோடு உள்ளிட்டப் பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டு உள்ளது.
அதே போல், மலப்புரம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. இதனால், அங்குள்ள மீட்புப் பணித் துறையினர் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். மழைக் குறித்து, அரசு அதிகாரிகளுடன் கேரள முதல்வர் பினராய் விஜயன் ஆலோசனை நடத்தினார்.