ஹீரோ திரைவிமர்சனம்!

21 December 2019 சினிமா
heroreview.jpg

படத்தினை விமர்சனம் செய்வதற்கு முன், முக்கியமான ஒரு நபரை விமர்சனம் செய்ய வேண்டும். அது வேறு யாருமல்ல, இசை உலகின் இளவரசனான யுவன் சங்கர் ராஜாவைத் தான். ஒரு படம் அனைவரது மத்தியிலும், திரைக்கு வருவதற்கு முன், பேசப்பட வேண்டும் என்றால் கண்டிப்பாக பாடல்களால் மட்டும அது சாத்தியம் ஆகும்.

ஆனால், அதனை செய்ய தவறியிருக்கின்றார் இசையமைப்பாளர். இந்த காலத்திற்கு ஏற்றாற் போல பாடல்களைப் போடாமல், என்னமோ செய்துள்ளார். படத்தின் பின்னணி இசைப் பரவாயில்லை. யுவனின் ரசிகர்களுக்கு இது மாபெரும் வருத்தமான விஷயம் தான்.

சரி படத்திற்கு வருவோம். சக்திமானின் ரசிகர் தான் நம்ம நாயகர். சிறுவயது முதலே, சக்திமானைப் பார்த்து, சமூகத்தில் நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்கும் ஒரு சூப்பர் ஹீரோவாக ஆக வேண்டும் என ஆசைப்படுகின்றார். அவர் குடும்ப சூழ்நிலைக் காரணமாக, மார்க் சீட்டுகளை போலியாக தயாரிப்பது, கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவது என சில சில்லறை வேலைகளைப் பார்க்கின்றார்.

அவரிடம் போலி மார்க் சீட் கொடுத்து, கல்லூரியில் சேர்ப்பதற்கு மதி என்ற பெண்ணிற்காக முயல்கின்றார். திடீரென மதி தற்கொலை செய்து கொள்கின்றார். பின்னர், என்ன நடந்தது, அர்ஜீன் யார், அவருக்கும் இந்தப் படத்திற்கும் என்ன சம்பந்தம் வில்லன்களைப் பழி வாங்கினாரா இல்லையா, இவர் எப்பொழுது சூப்பர் ஹீரோவாக மாறினார் என, படத்தினை பரபரப்பாக உருவாக்கியிருக்கின்றார் இயக்குநர் பிஎஸ் மித்ரன்.

கல்விக்காக உருவாக்கப்பட்ட படம் என்றுக் கூடக் கூறலாம். காமெடி நடிகனாக தன்னுடைய பயணத்தினை ஆரம்பித்து, தற்பொழுது சூப்பர் ஹீரோவாக வளர்ந்து இருக்கின்றார் நம்ம சிவகார்த்திகேயன். படத்தின் முதல் பாதியில் சாதாரண மனிதனாக சண்டையிடும் சிவா, படத்தின் இரண்டாம் பாதியில் சூப்பர் ஹீரோவாக மாறி பட்டையைக் கிளப்புகின்றார். படத்தில் கொஞ்சம் காமெடி இருந்திருந்தால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது சிவாவின் படமாச்சே.

சண்டைக் காட்சிகள் பிரமாதமாகவே இருக்கின்றன. தமிழில் வருகின்ற சூப்பர் ஹீரோ படங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு தான். இந்தப் படம் அந்த லிஸ்டில் நம்பர் ஒன் இடத்தினைப் பிடிக்கும் என்பதில் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

மொத்தத்தில் ஹீரோ சிவாவினைக் காப்பான்.

ரேட்டிங் 3/5

HOT NEWS