பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு! ஜூன் 15ல் அனுமதிக்க முடியாது!

08 June 2020 அரசியல்
highcourt.jpg

ஜூன் 15ம் தேதி அன்று, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது என, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வருகின்ற ஜூன் 15ம் தேதி அன்று, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என, தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். இந்த சூழ்நிலையில், கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகின்ற காரணத்தால் ஜூன் 15ம் தேதி அன்று தேர்வு நடத்தக் கூடாது என, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை, சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது.

அதனை விசாரிக்கும் பொழுது, கொரோனா வைரஸ் தற்பொழுது வேகமாகப் பரவி வருகின்றது எனவும், தற்சமயம் சமூக இடைவெளி சாத்தியமில்லை எனவும் கூறப்பட்டது. அப்பொழுது, ஏற்கனவே தேர்வுகள் இரண்டு மாதங்கள் தள்ளிப் போயுள்ளது என, நீதிபதிகள் கேட்டனர். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் 30% அதிகமான மாணவர்கள் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகியப் பகுதிகளில் இருந்து வருகின்றனர். ஆகையில் தேர்வினை ஜூலை மாதத்திற்கு தள்ளி வைத்தனர்.

லட்சக்கணக்கான மாணவர்களின் நலனில் ஏன் இப்படி ரிஸ்க் எடுக்கின்றீர்கள், எனக் கேட்ட நீதிபதிகள் ஏன் இந்தத் தேர்வினை தற்பொழுதே நடத்த அவசரப்படுகின்றனர் என கேள்வி எழுப்பினர். மேலும், மாணவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் கூறினர். தொடர்ந்து அறிக்கையை மட்டும் தாக்கல் செய்வதால் என்ன பலன்?

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே உள்ளது. இதனை நீங்கள் கவனிக்கவில்லையா? ஜூன் 30 வரை ஊரடங்கு உள்ள நிலையில், மாணவர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், மற்ற அதிகாரிகளை இக்கட்டான சூழ்நிலைக்கு உள்ளாக்க வேண்டுமா எனவும் கேட்டுள்ளனர். பின்னர், அரசு தரப்பு வழக்கறிஞருக்காக இந்த வழக்கினை தள்ளி வைக்க முடியாது எனவும், உடனடியாக ஆஜராகாவிட்டால், தேர்வினை தள்ளிவைக்க உத்தரவிடப்படும் என்றுக் கூறினர்.

இந்நிலையில், இன்று மதியம் 2.30 மணியளவில் அரசு தரப்பு வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜரானார். அவர் வாதிடுகையில், வருகின்ற ஜூலை மாதத்தில் இந்த கொரோனா வைரஸ் தொற்றானது, வேகமாகப் பரவ ஆரம்பிக்கும் எனவும், எனவேத் தேர்வினை நடத்த இதுவே சரியான தருணம் என்றும் கூறினார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள், டாஸ்மாக் திறக்க அனுமதித்தது போல, பள்ளிகள் விஷயத்தில் அனுமதிக்க இயலாது என்றுக் கூறினர். மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால், யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்பினர். மேலும், இந்த வழக்கின் ஜூன் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இதனால், தேர்வானது ஜூலை மாதத்திற்கு தள்ளி வைக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

HOT NEWS