விநாயகர் சதுர்த்தி நடத்த உத்தரவிடக் கோரிய மனுவினை திரும்பப் பெறுங்கள் என, உயர்நீதிமன்றம் காட்டமாகக் கூறியுள்ளது.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு, தமிழக அரசு தடை விதித்து உள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த, தமிழக பாஜக தலைவர் எல் முருகன், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்றார். பின்னர், இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மனுவினை வழங்கினார். இது குறித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள், தினமும் 6000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், எப்படி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதிக்க முடியும்? கொரோனா தாக்கம் என்பது இல்லாத பட்சத்தில், நீதிமன்றம் ஏன் விநாயகர் சதுர்த்தி நடத்துவதில் தலையிடப் போகின்றது எனக் காட்டமாக கூறியுள்ளது.
மேலும், இது போன்ற மனுக்களைத் தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தினை வீணடிக்க வேண்டாம் என உயர்நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.