ஹெச்ஐவி மருந்தால் கொரோனா நோயாளி குணமானார்!

27 March 2020 அரசியல்
hivaids.jpg

கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில், கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ஹெச்ஐவி மருந்து அளிக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் தற்பொழுது கொரோனா வைரஸானது, தீவிரமாகப் பரவி வருகின்றது. தற்பொழுது வரை 10 பேர் பலியாகி உள்ளனர். 650 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவிலேயே கேரளா தான், இந்த வைரஸ் தொற்றால் அதிகமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

இங்குள்ள மருத்துவமனைகளில், தனிமைப்படுத்தப்பட்டு நோயாளிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்தினைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவரை எர்ணாகுளம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி, சிகிச்சை அளித்து வந்தனர்.

அவருக்கு, ஹெச்ஐவி நோய்க்கு வழங்கும் மருந்தினை பயன்படுத்தி, சிகிச்சை அளித்து வந்தனர். யாரும் எதிர்பாராத விதமாக அவருடைய உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் உண்டானது. தொடர்ந்து, அவருடைய உடலுக்கு அந்த மருந்தினையேப் பயன்படுத்தினர்.

இந்நிலையில், மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் நீண்ட ஆய்வுக்குப் பின் அவருடைய உடலில் நோய் தொற்று இல்லை என்பதை உறுதி செய்தனர். இது குறித்துப் பேசிய டாக்டர் ப்தாடுதீன், அவர் இங்கு அனுமதிக்கப்படும் பொழுது, மிகத் தீவிரமாக நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரால், சரியாக மூச்சு விட முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து, அவருக்கு செயற்கை சுவாசம், அளிக்கப்பட்டது. அவருடைய உடல்நலத்தினைக் காக்கும் பொருட்டு, குளோரோகுயின், லோபினவிர், ரெட்டோனவிர் மற்றும் ஓசில்டாமீவிர் உள்ளிட்ட மருந்துக் கலவையானது கொடுக்கப்பட்டது. இதனால், அவருடைய உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. தற்பொழுது அவர், பூரணக் குணமடைந்து விட்டார். இருப்பினும், அவர் தொடர்ந்து மருத்துவர் கண்காணிப்பில் உள்ளார் எனக் கூறியுள்ளார்.

உலகமே, எந்த மருந்து கொடுத்தால் குணமாகும் எனக் குழம்பியுள்ள நிலையில், ஹெச்ஐவி மருந்தால் குணப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் ஆச்சர்யமான விஷயமாகப் பார்க்கப்படுகின்றது.

HOT NEWS