வேலையில்லாத் திண்டாட்டம்! சமாளிக்க என்ன வழி!

27 August 2019 தொழில்நுட்பம்
entrepreneurship.jpg

நம் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், படித்தப் படிப்பிற்கு ஏற்ற வேலைக் கிடைக்காததால், கௌரவம் பார்த்து பலர் வீட்டிலேயே அரசாங்க வேலைக்குப் படிக்க ஆரம்பித்துவிடுகின்றனர்.

இதனால், நாட்டின் பொருளாதாரம் கணிசமான அளவில், பெரும் பாதிப்பினை அடைகிறது. அதிக வரி விதிப்பின் காரணமாக, கையில் இருக்கும் பணத்தினைக் காப்பதிலேயே முதலீட்டாளர்கள் மிகக் கவனமாக இருக்கின்றனர். இதனால், அவர்கள் கையில் உள்ளப் பணத்தினை முதலீடு செய்வதில் தயங்குகின்றனர். அரசாங்கம் எவ்வளவு உதவிகள் அளித்தாலும், முயற்சிகள் செய்தாலும் பெருமளவில் முதலீடு செய்யவது இல்லை.

முதலீடு இல்லாமல் தொழில் இல்லை, தொழில் இல்லாமல் தொழிலாளர்கள் இல்லை. எனவே, இதுவே பிரச்சனைகள் அனைத்திற்கும் மூலாதாரம் ஆக நிபுணர்களால் பார்க்கப்படுகிறது. பெரும்பாலான இளைஞர்கள் ஐடி துறை, பேங்கிங், அரசாங்க வேலை ஆகியவற்றையே குறிவைத்து செல்கின்றனர். அதனாலேயே போட்டி அதிகமாகி, வாய்ப்புகள் அந்தத் துறைகளில் குறைந்துவிடுகின்றனர்.

இவைகளில் இருந்து, சற்று பொறுமையாக யோசித்தாலே எளிதாகத் தப்பித்துவிடலாம். முதலில் அனைவரும் செல்கின்றார்கள் என, நாமும் அவர்கள் செல்லும் பாதையில் செல்லக் கூடாது. இது கேட்பதற்கு சற்று கடுப்பாக இருக்கலாம் ஆனால் அது தான் உண்மை. அனைவரும் பொறியியல் படித்தார்கள் என, பல லட்சம் மாணவர்கள் தமிழகத்தில், பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தனர். விளைவு, பொறியியல் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

அவர்களுக்கான வேலை வாய்ப்பும் குறைந்தது. ஒரு வேளை, வேலைக் கிடைத்தாலும், வேலைக்கேற்ற சம்பளம் இல்லை. விளைவு வேலையில்லாத் திண்டாட்டம்.

அதே போல் தான், அனைவரும் செல்கின்றார்கள் என எண்ணி, நாமும் அரசாங்க வேலை, பேங்க் வேலை, ஐடி துறையில் வேலை என ஆசைப்பட்டு சென்றால், வாழ்நாள் முழுவதும் கோவிந்தா தான்! இதற்குப் பதிலாக, நீண்ட நாள் பலன் தரும் பகுதியை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். பொறியியல் படித்துள்ளேன், பொறியியல் வேலைத் தான் பார்ப்பேன் என வரட்டுக் கௌரவம் பார்ப்பதால், பத்து பைசாவிற்குப் பிரயோஜனம் இல்லை. எனவே, சற்று ஆழ்ந்து சிந்திக்கவும். ஒரு நிறுவனத்தில் வேலை செய்தால், வேலை செய்யும் காலங்களுக்கு மட்டுமே நமக்கு சம்பளம் வரும். இதே சுயதொழில் செய்தால், கண்டிப்பாக, வாழ்நாள் முழுவதிற்கும் வருமானம் உண்டாகும்.

ஆனால், இதிலும் சிக்கல் உள்ளது. வேலைக்குச் சென்றால், முதலில் கைநிறைய சம்பளம் வாங்குவதுப் போலத் தோன்றும். ஆனால், நாளடைவில், திருமணம், குழந்தைகள் ஆகியவை வந்த பிறகு எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் பத்தாமல் போய்விடும். இதில் ஈஎம்ஐ போட்டு, மொபைல் முதல் வீடு வரை அனைத்தையும் வாங்கி, கடன்காரர்களாக வாழ்நாள் முழுவதும் வட்டி கட்டியே சாகவேண்டி வரும். இதே சொந்தத் தொழில் என்றால், முதலில் காற்று வாங்கும். பின்னர், எந்தத் தொழிலாக இருந்தாலும், கண்களுக்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் தெரியும், பின்னர், அது பத்து ரூபாயாக மாறும். இப்படியேத் தான் தொழிலில் வளர்ச்சி உண்டாகும். அந்த வளர்ச்சியால் கிடைக்கும் பலன் காலம் முழுவதும் நிலைத்து இருக்கக் கூடியது. அது மட்டுமல்ல, ஒரு நிறுவனத்தில் வேலை செய்தால் அது வேலையாகவே இருக்கும். இதுவே, ஒரு சிறுத் தொழிலை நீங்கள் ஆரம்பித்தால், அது உங்களுக்கு சொத்தும் கூட. வேறுவழியில்லை என்றால், அதனை நீங்கள் விற்கவும் செய்யலாம். எப்படி இருப்பினும் லாபம் தான்.

இதில் நமக்குத் தேவையான ஒரே விஷயம் பொறுமை மட்டுமே. லாபம் எப்பொழுது வரும் என்று யாருக்கும் தெரியாது. நீங்கள் செய்யும் முயற்சியை, கொடுக்கும் உழைப்பைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு நாள், விதைத்த விதை முளைக்கும், பின்னர் அது வளரும், பூக்கும் அதன் பின்னர் காய்க்க ஆரம்பிக்கும். பிறகென்ன, உங்கள் காட்டில் அடைமழை தான். எப்படிப்பட்ட சுயதொழிலாக இருந்தாலும், அதிகபட்சம் ஐந்தாண்டுகள் வரை தான் லாபம் இல்லாமல் இருக்கும். அதற்கு மேல் எப்படி இருப்பினும், எதாவது வழியில் லாபம் வர ஆரம்பித்துவிடும். அதுவரை நீங்கள் பொறுமையா இருந்து தான் ஆக வேண்டும்.

சுய தொழில் ஆரம்பிக்க எளிய வழிகள்!

பெரிய அளவில் முதலீடு செய்யாமல், சிறிய அளவில் கடன் இல்லாமல் தொழிலை ஆரம்பிக்க வேண்டும். வீட்டில் கை நீட்டி பணம் வாங்கி செலவு செய்யும் நிலை இல்லாமல், பார்த்துக் கொள்ள வேண்டும்.

வீட்டின் பிரச்சனையை சமாளிக்க நீங்கள் நினைக்கக் கூடாது. ஏனெனில், சுயதொழில் என்பது பிரச்சனையான விஷயம். அதே சமயம், உங்கள் வீட்டில் இருப்பவர்கள், உங்களிடம் பணத்தினை எதிர்ப்பார்க்காமல் இருப்பது நல்லது. ஏனெனில், நீங்களே சுயதொழில் ஆரம்பித்து எப்பொழுது விடிவுகாலம் பிறக்கும் என காத்திருப்பீர்கள், அப்படி இருக்கையில், உங்களிடம் அவர்கள் எதிர்ப்பார்க்காமல் அதற்கு அவர்கள் மாற்று வழி செய்து கொள்ள வேண்டும்.

முதலில் சுய தொழில் மூலம் வரும் வருமானத்தை, அந்தத் தொழில் சார்ந்த உபகரணங்கள் வாங்குவதற்குப் பயன்படுத்துங்கள்.

எந்தத் தொழில் செய்தாலும், அந்தத் தொழிலைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொள்ளுங்கள். எவ்வளவுக்கெவ்வளவு கற்றுக் கொள்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உங்கள் தொழிலை விரிவுபடுத்தலாம்.

மீண்டும் இங்கு கூறும் விஷயம், சுயதொழில் செய்பவர்களுக்குத் தேவையான மிக அத்தியாவசியமான ஒன்று பொறுமை.

HOT NEWS