உலகளவில் தன்னுடைய 35,000 பணியாளர்கள் பணிநீக்கம் செய்ய உள்ளதாக, ஹெச்.எஸ்.பி.சி நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகம் கொரோனா வைரஸ் காரணமாக, பொருளாதாரப் பின்னடைவானது ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து, பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளதால், பல நிறுவனங்கள் நஷ்டத்தினை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றன. மேலும், இந்த ஊரடங்கு காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பினை எவ்வாறு ஈடுகட்டுவது எனவும் யோசித்துப் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த சூழலில், இந்தியா, அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஐடி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தங்களுடைய நிறுவனங்களில் இருந்து, பணியாளர்களை நீக்கும் செயலில் இறங்கி உள்ளன. உலகளவில் பிரசித்திப் பெற்ற ஹெச்.எஸ்.பி.சி நிறுவனம், தற்பொழுது தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் 2,35,000 ஊழியர்களில் 35,000 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
இது குறித்துப் பேசியுள்ள அந்நிறுவனத்தின் சிஇஓ நோயல் குவின், இது தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது எனக் கவலைத் தெரிவித்துள்ளார். மேலும், புதிதாக யாரையும் தற்பொழுது தேர்ந்தெடுக்கப் போவதில்லை எனவும், இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையானது எப்பொழுது முடியும் என எங்களுக்குத் தெரியாது எனவும், இது தொடரும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால், இந்தியாவின் ஹெச்.எஸ்.பி.சி கிளைகளில் பணிபுரியும் ஊழியர்கள், கடுமையாக கவலை அடைந்துள்ளனர். இது வெறும் ஆரம்பம் தான் எனவும், பல நிறுவனங்கள் இந்த கொரோனா தொற்றுக்குப் பிறகு பல லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யும் எனவும் கூறப்படுகின்றது.