பிரண்ட்ஸ் ஆஃப் போலீசிற்கு அங்கீகாரம் உண்டா? மனித உரிமைகள் ஆணையம் கேள்வி!

07 July 2020 அரசியல்
mnmhelpp1.jpg

பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பிற்கு, சட்ட ரீதியிலான அங்கீகாரம் எதுவும் உண்டா என, தமிழக மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது.

கடந்த மாதம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் ஆகியோர், காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், அவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரித்தது. இதில் பலத் திடுக்கிடும் உண்மைகள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

இந்தப் பிரச்சனைக் குறித்து, தமிழக மனித உரிமைகள் ஆணையமும், தாமாக முன்வந்து விசாரித்து வருகின்றது. இந்நிலையில் சாத்தான்குளத்தினைச் சேர்ந்த அதிசய குமார் என்பவர், தமிழக மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் ஒன்றினை அளித்தார். அதில், தமிழக பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் எனும் அமைப்பானது, மக்களிடம் அத்துமீறுவதாகவும், மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டது. இதனை விசாரணைக்காக தமிழக மனித உரிமைகள் ஆணையம் ஏற்றுக் கொண்டது.

இன்று இது குறித்து விசாரணைக்கு அந்த மனு வந்தது. அதில், தமிழகப் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பிற்கு, சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளதா எனவும், காவல்துறையின் அதிகாரத்திற்குட்பட்ட பணிகளை மேற்கொள்ள, பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பயன்படுத்தப்படுவது மனித உரிமை மீறல் ஆகாதா எனவும் கேள்வி எழுப்பி உள்ளது. இது குறித்து, தமிழக உள்துறை செயலாளர் மற்றும் சாத்தான் குளம் டிஜிபி ஆகியோர் தகுந்த பதிலினை வருகின்ற நான்கு வாரங்களுக்குள் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

HOT NEWS