புதிய ஸ்மார்ட் வெப்பன்களை வாங்க இந்திய விமானப்படை முடிவு!

29 July 2020 அரசியல்
fighter-jet-1.jpg

புதிதாக அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த, ஆயுதங்களை வாங்க, இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், தற்பொழுது லடாக் மற்றும் லே பகுதியில் மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால், இரண்டு நாட்டு இராணுவமும் ஆயுதக் குவிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில், இந்திய அரசாங்கம் தன்னுடைய இராணுவத்திற்கு அவசர நிதியினை ஒதுக்கி உள்ளது.

அதனை வைத்து, புதிதாக ஆயுதங்கள், துப்பாக்கிகள், விமானங்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கி உள்ளது. இன்று மதியம், இந்தியாவிற்கு பிரான்ஸ் நாட்டில் உருவாகி உள்ள ரபேல் போர் விமானங்கள் வருகின்றன. மொத்தம் ஐந்து விமானங்களை அவசரமாகப் பெறுகின்றது இந்தியா. இதற்கான ஒப்பந்தமானது, கடந்த 2018ம் ஆண்டு கையெழுத்தானது. மொத்தம் 36 ரபேல் விமானங்களை 59,000 கோடிக்கு இந்தியா வாங்க ஒப்பந்தம் செய்தது.

இந்த விமானம் இந்தியாவின் விமானப் படையுடன் இணைந்தால், அதன் வலிமைப் பல மடங்கு உயரும். இதனைக் கருத்தில் கொண்டு அதற்கானப் பணிகள் துரிதக் கதியில் நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த ரபேல் விமானத்தில் புதிய அதிநவீனத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஆயுதங்களை நிறுவவும் இந்திய விமானப் படை முடிவு செய்துள்ளது.

அதற்காக ஹம்மர் என்ற ஏவுகணைகளை வாங்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, கையிருப்பில் உள்ள ஹம்மர் ரக ஏவுகணைகளை ரபேல் விமானத்தில் பொறுத்தவும் முடிவு செய்துள்ளது. மேலும், இந்த ரபேல் விமானத்தில் ஏர்-டூ-ஏர் ஏவுகணைகள், ஏர்-டூ-லேண்ட் ஏவுகணைகள், எம்கே80 ரக குண்டுகள், டாங்கிகளை அழிக்கும் குண்டுகள் ஆகியவைகள் பொறுத்தப்பட உள்ளன.

எதிரிகளின் ரேடார்களில் இருந்து தப்பிக்க உதவும் தொழில்நுட்பம் உள்ளிட்டவையும் பொறுத்தப்பட உள்ளன. இதனால், இந்திய விமானப் படையானது, புத்துணர்ச்சி அடையும் எனவும், அதன் வலிமைக் கூடும் எனவும் கூறப்படுகின்றது.

HOT NEWS