4,000 கோடி முறைகேடு! சம்பந்தபட்ட அதிகாரி சடலமாக மீட்பு!

25 June 2020 அரசியல்
vijayshankarias.jpg

நான்காயிரம் கோடி ரூபாய் முறைகேட்டில் தொடர்புடைய, ஐஏஎஸ் அதிகாரி விஜய் சங்கர் அவருடைய வீட்டில் சடலமாக மீட்க்கப்பட்டார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில், ஐ மானிட்டரி என்ற நிறுவனத்தினை மன்சூர் கான் என்பவர் தொடங்கி நடத்தி வந்தார். குறைந்த அளவில் முதலீடு செய்தாலும், அதிக வட்டிப் பணத்தினை தருவதாக, தன்னைத் தேடி முதலீட்டாளர்களுக்கு ஆசைகாட்டி வந்தார். இதனை நம்பி, பல லட்சம் பேர், அவருடைய நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

குறைந்தக் காலத்திலேயே அதிக முதலீடுகளை, அந்த நிறுவனம் பெற்றது. 4,000 கோடி ரூபாய் அளவிலான பணமும் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் அதிபரான மன்சூர் கான் தற்பொழுது வெளிநாடு தப்பிச் சென்று விட்டார்.

இவ்வாறு அவர் செய்ததை எதிர்த்து, பலரும் போலீசில் வழக்குத் தொடர்ந்தனர். இதனை அடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை இந்தியாவிற்கு அழைத்து வரும் முயற்சியில், கர்நாடக சிபிசிஐடி போலீசார் களமிறங்கினர். தொடர்ந்து, பல முயற்சிகளுக்குப் பிறகு, மன்சூர் கான் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையினைத் தொடர்ந்து, அவருக்கு உடந்தையாக இருந்த 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவரை விடுவிப்பதற்காக முன்னாள் பெங்களூர் நகர துணை கலெக்டரும், ஐஏஎஸ் அதிகாரியுமான விஜய் சங்கர் என்பவர் ஒன்றரைக் கோடி லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனால், போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் தற்பொழுது ஜாமீனில் வெளியில் வந்திருந்தார்.

இருப்பினும், அவரிடம் அதிகமான விவரங்களைப் பெற வேண்டும் எனவும், விசாரிக்க அனுமதி வேண்டும் எனவும் சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் கூறினர். இதனிடையே, 23ம் தேதி அன்று இரவு அவர் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடலினைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும், இது சந்தேகப்படும் விதத்தில் உள்ள மரணம் என, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம், தற்பொழுது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS