இந்த ஜூலை மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த, சிஏ தேர்வானது ரத்து செய்யப்படுவதாக ஐசிஏஐ அமைப்பு அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல், ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், கல்லூரிகள், பள்ளிகளில் நடைபெற இருந்தத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு வந்தன.
பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புத் தேர்வுகளை, பல மாநிலங்கள் ரத்து செய்தன. சிபிஎஸ்இ அமைப்பும், 10ம் வகுப்புத் தேர்வினை ரத்து செய்தது. இந்த சூழ்நிலையில், பல்வேறு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. தற்பொழுது ஐசிஏஐ அமைப்பு நடத்தும் சிஏ தேர்வானது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த மே மாதம் நடைபெற இருந்த இந்தத் தேர்வானது, ஊரடங்கின் காரணமாக ஜூலை 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இருப்பினும், இந்த மாதம் முழுக்க ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டு உள்ளதால், இந்த பருவத்திற்கான சிஏ தேர்வானது ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்தத் தேர்வானது, நவம்பரில் நடைபெறும் தேர்வுடன் சேர்த்து நடைபெறும் என்றுக் கூறப்பட்டு உள்ளது. மேலும், இந்தத் தேர்விற்கான கட்டணம் செலுத்தியவர்கள் அனைவரும், வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறுகின்ற அடுத்தத் தேர்வுடன் சேர்த்து நடைபெறும் தேர்வில் நேரடியாகக் கலந்து கொள்ளலாம் என்றுக் கூறப்பட்டு உள்ளது.