இந்தியா வெற்றி! மேற்கு இந்தியத் தீவுகளை காலி செய்தது!

26 August 2019 விளையாட்டு
indvswi1sttest.jpg

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த 22ம் தேதி தொடங்கிய போட்டி நாளாம் நாளான நேற்றுடன் முடிவடைந்தது. இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வெற்றியைப் பதிவு செய்தனர்.

டாஸ் வென்ற வெ. இண்டீஸ் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி 96.4 ஓவரில், 297 ரன்கள் குவித்தது. ரஹானே 81, ஜடேஜா 58, லோகேஸ் ராகுல் 44 ரன்கள் குவித்தனர்.

வெ. இண்டீஸ் அணியின் ரோச் 4 விக்கெட்டுகளும், கேப்ரியல் 3 விக்கெட்டுகளும், சேஸ் 2 விக்கெட்டுகளும், ஹோல்டர் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். பிறகு தன்னுடைய முதல் இன்னிங்சை ஆரம்பித்த வெ.இண்டீஸ் அணி, 74.2 ஓவரில், 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இஷாந்த் ஷர்மாவின் புயல்வேகப் பந்துவீச்சில், அந்த அணி நிலை குலைந்தது எனலாம். இஷாந்த் ஷர்மா அற்புதமாக பந்து வீச்சை வெளிப்படுத்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முஹமத் ஷமி மற்றும் ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளையும், பூம்ரா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

பின்னர் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை இந்திய அணித் தொடங்கியது. 112.3 ஓவர் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் சேர்த்து வலுவான நிலையினை எட்டியது. லோகேஸ் ராகுல் 38, அகர்வால் 16, புஜாரா 25, கோலி 51, ரஹானே 102, விஹாரி 93, பண்ட் 7 ரன்கள் சேர்த்தனர். அப்பொழுது இந்திய அணி டிக்ளேர் செய்தது.

வெ.இண்டீஸ் அணியின் சேஷ் 4 விக்கெட்டுகளும், கேப்ரியல், ரோச் மற்றும் ஹோல்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 400 ரன்களுக்கும் மேல் அடிக்க வேண்டியக் கட்டாயத்துடன் வெ.இண்டீஸ் அணி களமிறங்கியது. அந்த அணி 26.5 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வி அடைந்தது. அந்த அணியின் வீரர்கள் ரோச் 38, கும்மின்ஸ் 19, சேஸ் 12 ரன்கள் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் பூம்ரா 5 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளையும், முஹமத் ஷமி இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியை எவ்வித சிரமமுமின்றி, எளிதாக வென்று 1-0 என்ற கண்ணகில் முன்னிலைப் பெற்றுள்ளது.

HOT NEWS