இன்று இந்தியா முழுவதும் நாடு தழுவிய பந்த்தானது அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்தில் அனைத்து வாகன சேவையும் வழக்கம் போல் இயங்கும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
கடந்த 12 நாட்களாக இந்திய விவசாயிகள், டெல்லியின் நுழைவு வாயிலில் அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசுக் கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் மசோதாக்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி, அதனை நீக்க வேண்டும் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் மற்றும் கடும் குளிர் எனப் பலப் பிரச்சனைகள் இருக்கின்ற போதிலும், இவைகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல், தொடர்ந்து போராடி வருகின்றனர்.
அவர்கள் இது குறித்துத் தெரிவிக்கையில், அடுத்த ஆறு மாதங்களுக்குத் தேவையான உணவுகளையும், தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் எடுத்து வந்துள்ளோம். கட்டாயம் இந்தப் போராட்டத்தில் பஞ்சாப், உத்திரப் பிரதேசம், ஹரினா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மட்டுமின்றி, பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் தற்பொழுது கலந்து கொண்டு உள்ளனர். அது மட்டுமின்றி, போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, அவரவர் மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், இன்று முதல் இந்தியா முழுவதும் காலவரையறையற்ற ஸ்டிரைக் என, இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்து உள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று இந்தியா முழுவதும், லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை. இதற்கு ஆதரவு தெரிவித்து எதிர்கட்சிகளும் இந்தியா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து, தமிழக அரசு தெரிவிக்கையில், தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், வாகனங்கள் அனைத்தும் செயல்படும் எனவும் கூறியுள்ளது.