மொரீசியஸ் கடல் பகுதியில் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவும் அந்நாட்டிற்கு உதவி செய்ய முன் வந்துள்ளது.
மொரீசியஸ் நாட்டிற்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடல் பகுதியில், ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த எம்வி வாகாஷியோ என்ற எண்ணெய் கப்பலானது, மொரீசியஸின் பாதுகாக்கப்பட்ட கடற்பகுதிக்குள் செல்லும் பொழுது, அங்கிருந்த பாறையில் மோதியது. இதனால், அந்தக் கப்பலில் விரிசல் ஏற்பட்டு மூழ்க ஆரம்பித்தது. விஷயம் அறிந்த மொரீசியஸ் அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து அக்கப்பலில் பணிபுரிந்த ஊழியர்களைப் பத்திரமாக வெளியேற்றினர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அந்தக் கப்பலில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, கப்பலில் உள்ள கச்சா எண்ணெயானது, கடலில் கலக்க ஆரம்பித்தது. சுமார், 4500 டன் கச்சா எண்ணெயினை, அந்தக் கப்பல் கொண்டு வந்தது. எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தால், டன் கணக்கில் கடலில் எண்ணெயானது கலக்க ஆரம்பித்து உள்ளது.
இது மொரீசியஸ் நாட்டின் மிகப் பெரிய சுகாதார அழிவாக, விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அந்த நாட்டில் போதிய வசதிகள் இல்லாதக் காரணத்தால், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் உதவிக் கோரியது. இதற்கு தற்பொழுது பல நாடுகள் தங்களுடைய உதவியினை வழங்க முன் வந்துள்ளன. இந்திய அரசும் தம் சார்பில் உதவியினை வழங்க முன் வந்துள்ளது.
இதற்காக, இந்தியாவில் இருந்து சுமார் 30டன்னுக்கும் அதிகமான இயந்திரங்களை, விமானத்தின் மூலம் இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இந்தக் கருவிகள் அனைத்தும், எண்ணெயினை உறிஞ்சி எடுக்கும் தன்மைப் படைத்தவை. அத்துடன், இவைகள் இந்த எண்ணெயானது, மேலும் பரவாமல் தடுக்கும் சக்திப் படைத்தவை என்றுக் கூறியது. தற்பொழுது எண்ணெயினைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்தியக் கப்பல்களும், கருவிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.