சுமூகமாக இப்பிரச்சனையை தீர்ப்போம்! அமெரிக்காவின் கருத்திற்கு இந்தியா பதில்!

29 May 2020 அரசியல்
indianarmy1.jpg

சீனாவுடன் நிலவி வருகின்ற பதற்றத்தினை, சுமூகமாக தீர்ப்போம் என, இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், தற்பொழுது லடாக் பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இரு நாட்டு இராணுவமும், தங்களுடையப் படைகளை லடாக் பகுதியில் குவித்து வருகின்றன. சுமார், 3500 கிலோமீட்டர் உள்ள அந்த எல்லைப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக சீன இராணுவம், போர் விமானங்களை நிறுத்தி உள்ளது. மேலும், தங்களுடைய பத்தாயிரத்திற்கும் அதிகமான போர் வீரர்களையும், அங்கு பணியமர்த்தி உள்ளது.

இந்நிலையில், இந்திய தரப்பிலும் இராணுவத்தினர் தங்களுடையப் படையினை நிறுத்தி வருகின்றனர். இந்தியாவின் ட்ரோன்களும், பாதுகாப்புப் படையினரும் தொடர்ந்து இந்திய எல்லையைக் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள பதற்றத்தினைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்க, அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இந்தப் பதற்றமானது, வெளியுறவுத்துறை மூலம் முடிவுக்கு கொண்டு வரப்படும். இரு தரப்பிலும் இருந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இதனால், அமெரிக்கா இதில் தலையிட வேண்டியதில்லை. இந்திய சீன எல்லையில், அமைதியினை நிலைநிறுத்துவதற்கு இரு நாட்டு அரசாங்கமும் முயன்று வருகின்றன.

எல்லையினைப் பொறுத்த வரையில், இந்திய இராணுவம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்தியா எக்காரணம் கொண்டும், தன்னுடைய எல்லையையும், இறையாண்மையையும் விட்டுக் கொடுக்காது என கூறப்பட்டு உள்ளது.

HOT NEWS