ககன்யான் திட்டத்தின் மூலம் இந்தியர் விண்வெளிக்கு அனுப்பப்படுவர்! சிவன் அறிவிப்பு!

08 January 2020 அரசியல்
sivan.jpg

ககன்யான் திட்டத்தின் மூலம், இஸ்ரோவின் மூலம் இந்தியாவினைச் சேர்ந்த வீரர் அல்லது வீராங்கணை, விண்வெளிக்கு அனுப்பப்படுவர் என, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசும் பொழுது, வருகின்ற 2022ம் ஆண்டு இந்தியாவின் சார்பில், விண்வெளிக்கு வீரர் அல்லது வீராங்கணை அனுப்பப்படுவர் என கூறினார். அதனை மெய்ப்பிக்கும் விதமாக, சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப்பில் ககன்யான் திட்டமானது உருவாக்கப்பட்டு வருவதாக, சிவன் கூறியுள்ளார்.

இதற்காக இஸ்ரோவின் சார்பில், இந்திய விமானப் படையினைச் சேர்ந்த நான்கு வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்கள், வருகின்ற ஜனவரி மூன்றாம் வாரத்தில், ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். அங்கு, அவர்களுக்குப் பல்வேறு விதமானப் பயிற்சிகளும், விண்வெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற முறைகளும் கற்றுக் கொடுக்கப்பட உள்ளன.

அவர்களுக்கு சுமார் 11 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பின்னர், அவர்களில் சிறந்த ஒருவரைத் தேர்வு செய்து, விண்வெளிக்கு அனுப்ப உள்ளோம். பயிற்சிப் பெறும் வீரர்களின் பெயர்களை எங்களால் வெளியிட முடியாது. ஆனால், தற்பொழுது வரை தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஆண்களே! விண்வெளியில் அவர்கள் உண்ண வேண்டிய உணவு, உடுத்த வேண்டிய உடை உட்பட அனைத்தையும் தற்பொழுது திட்டமிட்டு வருகின்றோம். விரைவில், அவைகளை உருவாக்கவும் உள்ளோம். இந்தத் திட்டத்திற்காக சுமார், 10,000 கோடி ரூபாயானது ஒதுக்கப்பட்டுள்ளது.

புவியின் குறைந்த சுற்றுப்பாதையில், அந்த விண்வெளி வீரர் இருக்க உள்ளார். அவர் சரியாக ஏழு நாட்கள் அங்கு இருக்கும் படி, திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவர் உண்பதற்கு, எக் ரோல், வெஜ் ரோல், இட்லி, அல்வா மற்றும் புல்லாவோ உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. விண்வெளிக்கு அனுப்பப்படும் வீரர், மனிதனால் உருவாக்கப்பட்டு விண்வெளியில் இருக்கும் செயற்கை கோள்களின் பாதையில் பயணிப்பார். இந்தத் திட்டமானது, டிசம்பர் மாதம் 2021ம் ஆண்டு அன்று, நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த திட்டத்திற்காக ஜிஎஸ்எல்வி மார்க்-3 விண்கலம் பயன்படுத்தப்படும் எனவும், அவர் தனியார் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்துள்ளார்.

HOT NEWS