இந்திய பட்ஜெட் 2020 முழுமையான விவரம்!

01 February 2020 அரசியல்
budget2020.jpg

இந்த ஆண்டிற்கான, பொருளாதார பட்ஜெட்டானது, இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ் பொதுமறையான திருக்குறளில் ஆரம்பித்தார்.

பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம் அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து, என்ற திருக்குறளில் ஆரம்பித்தது பட்ஜெட் கூட்டத் தொடர். பூமி திருத்தி உண் எனும் ஔவையாரின் ஆத்திச்சூடி வரிகளை மேற்கோள் காட்டிப் பேச ஆரம்பித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்தக் கூட்டத் தொடரில், சுமார் 2 மணி 43 நிமிடங்கள் பேசி புதிய சாதனையைப் படைத்தார் நிர்மலா சீதாராமன். இதற்கு முன்னால், அவர் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், சுமார் 2 மணி 15 நிமிடம் பேசியதே சாதனையாக இருந்தது.

காலை 11 மணிக்கு, பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பித்தது இந்தக் கூட்டத் தொடருக்கு, பட்ஜெட் அறிக்கையினை, சிவப்பு நிறை பையில் வைத்து கொண்டு வந்திருந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

முதலில் திட்டங்களைப் பற்றிப் பார்க்கும் முன், எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டு உள்ளது எனப் பார்ப்போம்.

கல்வித்துறைக்கு 99,300 கோடி ரூபாயும், வேளாண்மைத் துறைக்கு 2.83 லட்சம் கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு உள்ளது. சுகாதாரத் துறைக்கு 69,000 கோடி ரூபாயும், ஸ்கில் இந்தியா திட்டத்திற்கு 3,000 கோடி ரூபாயும், தொழில்துறை மற்றும் வர்த்தகத்திற்கு 27,300 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு 22,000 கோடி ரூபாயும், போக்குவரத்து உள்கட்டமைப்பு 1.7 லட்சம் கோடி ரூபாயும், குவாண்டம் தொழில்நுட்பத்திற்கு 8,000 கோடி ரூபாயும், பெண்கள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு 28,600 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு உள்ளது. எஸ் சி மற்றும் எஸ் டி பிரிவினரின் வளர்ச்சிக்காக 85,000 கோடி ரூபாயும், சுற்றுலா மற்றும் மேம்பாடு துறைக்கு 2,500 கோடி ரூபாயும், மூத்த குடிமக்கள் மற்றும் திவ்யங் திட்டத்திற்காக 9,500 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

அதே போல், கலாச்சாரத் துறைக்கு 3150 கோடி ரூபாயும், ஜம்மூ மற்றும் காஷ்மீர் பகுதியின் வளர்ச்சிக்காக 30,757 கோடி ரூபாயும், லடாக் பகுதிக்கு 5958 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்தப் பொருளாதார பட்ஜெட்டானது, இந்தியாவின் விருப்பம், பொருளாதார வளர்ச்சி மற்றும் அக்கறையுள்ள சமூகம் ஆகியவைகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது என, நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதனையடுத்து, ஒவ்வொரு திட்டத்தினையும் அவர் அறிவித்தார். பால், பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட, விவாசயப் பொருட்களை எடுத்துச் செல்ல தனி இரயில்கள் இயக்கப்பட உள்ளது. விரைவில் அளிக்கக் கூடிய, அளிக்க வேண்டிய காய்கறிகள், பழங்கள் ஆகியவை விரைவாக நுகர்வோரை சென்றடைவதற்கு, கிருஷி உடான் எனும் திட்டம் உருவாக்கப்படும்.

அதன் மூலம், விமானத்தினைப் பயன்படுத்தி காய்கறிகள் மற்றும் பழங்கள் எடுத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படும். வரும் 2022ம் ஆண்டுக்குள் விவாசியகளின் வருமானத்தினை இரட்டிப்பாக்க, முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும், பால் உற்பத்தியினை இரண்டு மடங்காக்க தேவையான முயற்சிகள் எடுக்கப்படும்.

விவசாயிக்காக 16 அம்சத் திட்டம்

விவசாயிகளுக்காக, 16 அம்சத் திட்டத்தினை நிதியமைச்சர் அதிரடியாக அறிவித்தார்.

2020-2021ம் ஆண்டுக்காக, விவாசயிகள் மற்றும் விவசாயத்திற்கு சுமார் 2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். இந்தியாவில் நூறு மாவட்டங்களில் நீர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. அவை சரி செய்யப்படும். விவசாயத்திற்காக அதிகபட்சமாக 15 லட்சம் கோடி ரூபாய் வரை, பயன்படுத்தப்படும்.

சோலார் பம்ப் திட்டமான, பிரதான் மந்திரி கிஷான் உர்ஜா சுரக்சா ஈவம் உத்தான் மஹாபியான் திட்டத்தின் கீழ், சுமார் 20 லட்சம் விவசாயிகளுக்கு சோலார் பம்புகள் வழங்க முடிவு. மேலும், சூரிய எரிசக்தி மூலம் இயங்கும் விவசாயப் பொருட்கள் பெற உதவி அளிக்கப்படும். இந்தியா முழுவதும், கிடங்குகள் அதிகமாக்கும் நடவடிக்கையானது மேற்கொள்ளப்படும்.

தான்ய லட்சுமி திட்டத்தின் மூலம், விவசாயப் பெண்களுக்கு புதிய உதவிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படும். இந்திய இரயில்வேயின் மூலம், இந்திய விவசாயப் பொருட்கள் நாடு முழுவதும் பரிமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவாசயப் பொருட்களின் தரத்தினை உயர்த்தவும், அதன் மதிப்பினை அதிகரிக்கும், ஒரு மாவட்டத்திற்கு ஒரு பொருள் திட்டம் கொண்டு வரப்படும். அதற்கு, நிலக் காப்புரிமை வழங்கப்படும்.

நபார்ட் வங்கித் திட்டத்தின் மூலம், வருகின்ற 2020-2021 ஆண்டு 15 லட்சம் வரை வழங்க முடிவு. மேலும், ஆன்லைன் மூலம், விவசாயப் பொருட்கள் மற்றும் விளைப் பொருட்களை விற்கவும் வழிவகை செய்யப்படும். பால் உற்பத்தியானது 53.8 மில்லியன் டன்னிலிருந்து 108 மில்லியன் டன்னாக, வருகின்ற 2025ம் ஆண்டுக்குள் உயர்த்த வழிவகை செய்யப்படும்.

2022-2023ம் ஆண்டுக்குள் மீன்களின் உற்பத்தியானது, 200 லட்சம் டன்னாக உயர நடவடிக்கை எடுக்கப்படும். சாகர்மித்ரா திட்டத்தின் கீழ், 500 மீன் விற்கும் பண்ணைகள் உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

வேலை வாய்ப்பினைப் பெருக்கும் வகையில், அனைவருக்குமான புதிய கல்விக் கொள்கையானது விரைவில் உருவாக்கப்படும். மேலும், இந்தியாவில் உள்ள தலைசிறந்த 100 பல்கலைக் கழகங்கள் மூலம், ஆன்லைன் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி பல படிப்புகள் கற்பிக்க, வழிவகை செய்யப்படும். ஆசிரியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் பராமரிப்பு பணியாளர்களுக்கு வெளிநாடுகளில், பெரும் தேவை இருக்கின்றது. அதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு, 3,000 கோடி ரூபாய் மதிப்பில் திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை மற்றும் பெங்களூருக்கு இடையில், விரைவில் எக்ஸ்பிரஸ் சாலைத் திட்டம் உருவாக்கப்படும். ரயில் பாதைகளை மின்மயமாக்க சுமார், 27,000 கோடி ரூபாயானது முதலீடு செய்யப்பட உள்ளது. பெங்களூர் நகரில் 18,600 கோடி ரூபாய் மதிப்பில், புறநகர் ரயில் திட்டம் உருவாக்கப்படும். அதே போல், டெல்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு இடையில், எக்ஸ்பிரஸ் சாலைத் திட்டத்தினை 2023ம் ஆண்டுக்குள் முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

ஸ்டடி இன் இந்தியா திட்டத்தின் கீழ், சுமார் 99,300 கோடி ரூபாயினை மத்திய அரசு முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம், பள்ளிக் கல்வியானது ஊக்குவிக்கப்பட உள்ளது.

2020-2021ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள சுமார், ஒரு லட்சம் கிராமங்களுக்கு 3,000 கோடி ரூபாய் மதிப்பில் உயர்தர இணைய சேவை வழங்கப்பட உள்ளது. நாடு முழுவதும் டேட்டா சென்டர்களை உருவாக்க, புதிய கொள்கை கொண்டு வரப்பட உள்ளது. மோடி அரசின் பேட்டி பச்சாவ் பேட்டி படாவ் திட்டம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் காரணமாக, பள்ளிகளில் சேரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையானது, ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளது.

பழங்குடியின மக்களின் வாழ்க்கை, வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக சுமார் 53,000 கோடி ரூபாயானது ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும், மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு, விரைவில் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

நாடு முழுவதும், ஆதிச்சநல்லூர் உட்பட ஐந்து இடங்களில் தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் ஆய்வு தளங்கள் உருவாக்கப்பட உள்ளது. பெண்களின் மேம்பாட்டிற்கு, 28,600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது. மாநில அரசுடன் இணைந்து இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், சீர்படுத்தவும் 4,400 கோடி ரூபாயானது பயன்படுத்தப்படும். மேலும், இந்தியாவில் வருகின்ற 2021ம் ஆண்டு, ஜனவரி மாதம் 1ம் தேதி முதல், அதிகளவில் சுற்றுச்சூழல் மாசினை உருவாக்கும் மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்படும். அந்த இடம் மற்ற செயல்களுக்காகப் பயன்படுத்தப்படும்.

வருகின்ற 2022ம் ஆண்டு ஜி20 மாநாடானது, இந்தியாவில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்காக பொருளாதார பட்ஜெட்டில் 100 கோடி ரூபாயினை, மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. வங்கிகளில் டெபாசிட் கணக்கின் மீதான காப்பீட்டுத் தொகையானது, ஒரு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, இனி வங்கித் திவாலானோ அல்லது நஷ்டம் அடைந்தாலோ, நுகர்வோருக்கு இழப்பீடாக சுமார் 5 லட்சம் வரை அளிக்கப்படும்.

எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் பங்குகள் விரைவில், பங்குச் சந்தையில் விற்கப்பட உள்ளன. வருகின்ற 2020-2021ம் ஆண்டு நம் நாட்டின் நிதிப் பற்றாக்குறையானது, 3.5% ஆக குறையும். மேலும், பொருளாதார வளர்ச்சியானது 10% ஆக உயரும்.

வருமான வரிச் சலுகை

இந்த முறை, வருமான வரிச்சலுகையானது தாராளமாக வழங்கப்பட்டு உள்ளது. இனி வருடத்திற்கு, 5 முதல் 7.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 10% வருமான வரி விதிக்கப்பட உள்ளது. 7.5 முதல் 10 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 15 சதவிகிதமும், 10 லட்சம் முதல் 12.50 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 20 சதவிகிதமும், 12.5 முதல் 15 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 25% வருமான வரி விதிக்கப்பட உள்ளது. மேலும், 15 லட்சத்திற்கு மேல், வருமானம் ஈட்டுவோருக்கு 30% வருமான வரியாக விதிக்கப்பட உள்ளது.

ஆண்டுக்கு 100 கோடி வரை வர்த்தகம் செய்வோருக்கு, லாபத்தில் இருந்து 100% வரி விலக்கு அளிக்கப்பட உள்ளது. இனி பான் கார்டு வாங்க அலைய வேண்டியதில்லை. ஆதார் கார்டினைப் பயன்படுத்தியே, ஆன்லைன் மூலம் பான் கார்டு பெறும் வசதியானது விரைவில் அறிமுகப்படுத்தப்படும். மேலும், பலத் திட்டங்கள் இருந்தாலும், 2.45 மணி நேரம் தொடர்ந்து இடைவிடாமல், பட்ஜெட் உரையை வாசித்ததால், சோர்வடைந்த நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையினை சமர்பித்தார்.

பட்ஜெட் உரையின் பொழுது, மோடியினை திருக்குறளில் கூறப்பட்டுள்ளது போல, மாமன்னர் எனப் புகழ்ந்தார் நிர்மலா சீதாராமன். இதனை, எதிர்கட்சிகள் மற்றும் தமிழக எம்பிக்கள் கடுமையாக எதிர்த்தனர். வருகின்ற திங்கட்கிழமை அன்று, பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

HOT NEWS