ஆறு மாநிலங்களில், இணைய சேவை துண்டிப்பு! மத்திய அரசு அதிரடி!

16 December 2019 அரசியல்
internetshutdown.jpg

குடியுரிமை மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வரும், ஆறு மாநிலங்களில் தற்காலிகமாக இணைய சேவையைத் துண்டித்துள்ளது மத்திய அரசு.

சென்ற வாரம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில், மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவானது வெற்றிகரமாக நிறைவேறியது. இதனையடுத்து, அந்த மசோதாவிற்கு, குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து, இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையானப் போராட்டம் வெடித்தது.

தொடர்ந்து, இந்தியாவின் பல மாநிலங்களில் போராட்டம் அடுத்தடுத்து தொடங்கியதால், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர, இராணுவம் களமிறக்கப்பட்டது. அசாமில் உள்ள கவுகாத்தி உள்ளிட்ட முக்கிய நகரங்களில், கலவரத்தினை அடக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே, தற்பொழுது இந்தியாவின் ஆறு மாநிலங்களில் கடுமையானப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்தப் போராட்டத்தின் காரணமாக, தற்காலிகமாக, அந்த ஆறு மாநிலங்களிலும் இணைய சேவையை நிறுத்தி உள்ளது மத்திய அரசு. ஜம்மூ மற்றும் காஷ்மீர், அசாம், மேகாலயா, திரிபுரா, அருணாச்சல் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இணைய சேவையானது முற்றிலும் முடங்கி உள்ளது. அது மட்டுமின்றி, சற்று முன் கிடைத்தத் தகவலின் படி, மேற்கு வங்கத்திலும் இணைய சேவையானது நிறுத்தப்பட்டுள்ளது.

இது போராட்டக்காரர்களின் தகவல் பரிமாற்றத்தினை தடுக்கும் எனப் பலரும் நம்புகின்றனர். இருப்பினும், அந்த மாநிலங்களில் போராட்டம் குறைந்ததாக தெரியவில்லை. இந்தியாவின் பல மாநிலங்களும், இந்த குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் இந்த மசோதாவினை, தங்களுடைய மாநிலங்களில் அனுமதிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளன.

கடந்த 2018ம் ஆண்டில் இருந்து தற்பொழுது வரை, 134 முறை இணையத்தினை தடை செய்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது உலகளவில் நடத்தப்பட்ட இணையத் தடையில் சுமார் 67% என்பது குறிப்பிடத்தக்கது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

HOT NEWS