ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் என்ன தான் பிரச்சனை? விரிவான பார்வை!

09 January 2020 அரசியல்
iranvsusa.jpg

அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையில் தற்பொழுது போர் மூலம் அபாயம் உண்டாகி உள்ளது. இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் பகிரங்கமாக எச்சரித்து வருகின்றனர். அமைதியாக இருந்த ஈரான் மீது, அமெரிக்க அதிபர் டிரம்ப் தாக்குதல் நடத்துவேன் என்றுக் கூறியதும், ஈரான் தாக்குதலை நடத்திவிட்டது.

உண்மையில், ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில், தற்பொழுது அல்ல, பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருவது தான் உண்மை. அதனைப் பற்றி விவரிக்கின்றது இந்தக் கட்டுரை.

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ஐக்கிய அமெரிக்க நாட்டிற்கும், ஈரானுக்கும் இடையில் பிரச்சனை நிலவி வருகின்றது. இவை அனைத்திற்கும் காரணமாக இருப்பது, ஈரானில் உள்ள எண்ணெய் வளங்களே ஆகும்.

1953ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள், ஈரானில் நடைபெற்றத் தேர்தலின் பொழுது ஜனநாயக முறைப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட மொஹமத் மொசாதிக்கினை வெளியேற்ற முயற்சி செய்து, அதில் வெற்றியும் பெற்றன. இதில், பெரும்பங்காற்றியது இரு நாட்டின் உளவு அமைப்புகளே ஆகும். ஈரானின் மதச்சார்பற்ற தலைவராக இருந்த மொஹமத் மொசாதிக், ஈரானின் எண்ணெய் வளத்தினை தேசியமயமாக்க முயன்றதற்காக இந்த சதி வேலையில் அமெரிக்கா ஈடுபட்டது.

பின்னர் 1973ம் ஆண்டு, ஈரானில் ஒரு புரட்சி உருவானது. அப்பொழுது அமெரிக்க ஆதரவாளரான ஷா மற்றும் ரேசா பஹ்லேவி ஆகியோருக்கு எதிராக, ஈரானில் கலவரமே நடைபெற்றது. இதனையடுத்து அவர்கள் ஜனவரி 16ம் தேதி அன்று, ஈரான் நாட்டினை விட்டு வெளியேற்றப்படுகின்றார். அப்பொழுது தான், நாட்டிற்கு மீண்டும் திரும்புகின்றார் அயதுல்லா கோமெய்னி. அவருடைய வருகைக்குப் பிறகு, ஈரானில் பொது வாக்கெடுப்பு நடதப்படுகின்றது. அந்த வாக்கெடுப்பிற்குப் பின்னர், ஏப்ரல் 1ம் தேதி அன்று, ஈரான் நாடானது, இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் மிதமான போக்கே இந்த நிகழ்விற்குப் பின்னர் நிலவி வந்தது. 1979ம் ஆண்டு, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகத்தினை, ஈரானில் உள்ள அமெரிக்க எதிர்ப்பாளர்கள் திடீரென்று முற்றுகையிட்டு அதனை கைப்பற்றுகின்றனர்.

இதனை எந்த நாடும் எதிர்பார்க்கவில்லை. இதனையடுத்து, அங்கிருந்த அமெரிக்கர்கள் பணயக் கைதிகளாக சுமார், 444 நாட்கள் உள்ளேயே வைக்கப்பட்டு இருந்தனர். இதனை ஆர்கோ என்ற படத்தில் தத்ரூபமாக காட்டியிருக்கின்றனர்.

1981ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் இறுதியில், அமெரிக்க அதிபராக ரொனால்ட் ரீகன் பதவியேற்கின்ற பொழுது, 52 பணயக் கைதிகளை விடுவித்தனர். மேலும், அந்த காலக்கட்டத்தில் அந்த சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க தூதரகத்தில் இருந்து, ஆறு பணயக் கைதிகள் தப்பித்தனர். இதில் அமெரிக்காவின் புகழ் சற்று மங்கியதாக அந்நாட்டினர் கருதினர்.

1985-86ல், லெபனான் நாட்டில் உள்ள ஹெஸ்பெல்லா குழு போராளிகள், அமெரிக்கர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்து இருந்தனர். அவர்களை மீட்க ஈரான் உதவியது. இதற்கு ஈடாக, அவர்களுக்கு பல்வேறு விதமான ஆயுதங்களை அமெரிக்க அரசாங்கம், ரகசியமாக வழங்கியது. இதனால், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையில் பரஸ்பர நல்லுறவு உருவாகி உள்ளது என பிற நாடுகள் நம்பின.

நிகரகுவா என்றப் பகுதியில் உள்ள போராளிகள் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு, அமெரிக்க அரசாங்கத்தின் மூலம், இரகசியமாக பண உதவி வழங்கப்பட்டது. பின்னர் இந்த செயல் வெட்ட வெளிச்சமானதும், அப்பொழுது ஆட்சி செய்து கொண்டு இருந்த அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனுக்கு, மாபெரும் அரசியல் நெருக்கடியினைத் தந்தது. இதனால், அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது கோபத்துடன் செயல்படத் தொடங்கியது.

1998ம் ஆண்டு, ஈரான் நாட்டில் இருந்து மெக்காவிற்கு சென்ற ஏர்பஸ் ஏ 300 விமானத்தினை, அமெரிக்காவின் கடற்படைக் கப்பலான, யுஎஸ்எஸ் வின்செஸ் ஜூலை 30, 1998ம் ஆண்டு அன்று சுட்டுத் தள்ளியது. இதனால், அந்த விமானம் வீழ்ந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த 290 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தன. ஈரான் போருக்கேத் தயாராகிவிட்டது. அப்பொழுது, நிலைமையை சுதாரித்துக் கொண்ட அமெரிக்கா, போர் விமானம் என நினைத்து, சுட்டு வீழ்த்தியதாக கூறியது. இது பெரும் விவாதப் பொருளாகவே மாறியது.

2000ம் ஆண்டின் தொடக்கத்தில், ஈரான் அரசு உலகத்திற்கு தெரியாமல், ரகசியமாக யூரேனியம் அணு குண்டினை உருவாக்கி வருகின்றது என அந்நாட்டின் எதிர் தரப்பினர் உண்மையை கசியவிட்டனர். இதனைப் பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா, ஈரான் மீது குற்றம்சாட்டியது. இருப்பினும், ஈரான் அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டது. ஆனால், அமெரிக்காவின் குரலுக்கு சர்வதேச நாடுகள் நடுங்கிப் போய், ஈரானில் அணுகுண்டு இருக்கின்றதா என ஆய்வு நடத்த வேண்டும் என, ஐநா சபையில் கோரிக்கை விடுத்தன.

இந்தப் பிரச்சனையால், ஈரான் அதிபர் மஹமத் அஹ்மதீனிஜாத்தின் அரசிற்கு, பெரும் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டது. இதனால், ஈரான் நாட்டின் கரன்சியின் மதிப்பானது மூன்றில் ஒரு பங்காக குறைந்தது. 2013ம் ஆண்டு ஹசன் ரோஹானீ ஈரான் நாட்டின் அதிபர் ஆனார். அவருடைய மக்கள் செல்வாக்கானது, மற்ற எதிரி நாடுகளை பதற வைத்தது.

இதனிடையே, கடந்த 2015ம் ஆண்டு முதல் ஈரான் மற்றும் அமெரிக்க அரசாங்கத்திற்கு இடையே, அணு குண்டு ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டது. அதன் மூலம், அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுடன் ஈரானும் இணைந்து கொண்டது. மேலும், தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுதங்களின் அளவினைக் குறைப்பதாகவும், மேலும் அணு ஆயுதங்களைத் தயாரிக்காமல் இருக்க உத்திரவாதம் அளிப்பதாகவும் கூறியது.

ஈரானின் வாக்குறுதியினை அடுத்து, அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்க அரசாங்கம் தளர்த்தியது. இதனால், ஈரானின் பொருளாதாரம் மளமளவென உயர ஆரம்பித்தது. உலகமே அமைதியாகச் சென்று கொண்டு இருந்தது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்த நிலையில், புதியதாக ஒரு பூதம் டிரம்ப் வடிவில் வந்தது.

2018ம் ஆண்டு மே மாதம், திடீரென்று அணு ஆயுத ஒப்பந்தங்களை கைவிட்ட டிரம்ப், ஈரான் மீதுப் பொருளாதாரத் தடையினை விதித்தார். இதனால், ஈரானின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியினை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது, உலக வர்த்தக சந்தையில், கச்சா எண்ணெயின் விலை கணிசமாக உயர்ந்து இருந்தது. அந்த நேரம் பார்த்து, இப்படி தடை விதிக்கப்பட்டதால், ஈரான் பொருளாதார மந்த நிலைக்கு ஆளானது.

மேலும், ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதும், பொருளாதாரத் தடையினை விதிப்பேன் என டிரம்ப் கூறியதால், ஈரானிடம் யாரும் எண்ணெய் வாங்க முன்வரவில்லை. ஆனால், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நல்ல உறவு நிலை நீடித்து வந்த காரணத்தால், இதிலிருந்து இந்தியாவிற்கு விலக்கு அளிக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் வரை, ஈரானிடம் இருந்து ரூபாயாகப் பணத்தினை அளித்து, கச்சா எண்ணெய்யை டன் கணக்கில் வாங்கியது இந்தியா.

இதனிடையே, 2019ம் ஆண்டு ஜூன் மாதத் தொடக்கத்தில், ஓமன் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த ஆறு எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டன. இதற்காக ஈரான் மீது அமெரிக்கா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியது. இதனையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் உருவாகும் நிலை நீடித்தது. இதன் பின்னர், 2019ம் ஆண்டு ஜூன் மாதத்தின் பிற்பகுதியில், அமெரிக்காவின் பாதுகாப்பு டிரோன் கருவியினை, ஈரான் இராணுவம் சுட்டு வீழ்த்தியது.

அந்த டிரோன் ஈரான் நாட்டின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பறந்ததாக, ஈரான் அரசாங்கம் விளக்கமளித்தது. ஆனால், அந்த டிரோன் சர்வதேசக் கடற்பகுதியில் பறந்ததாக அமெரிக்கா புகார் தெரிவித்தது. இதனிடையே இந்த 2020ம் ஆண்டின் தொடக்கத்தில், ஈரானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தினை ஈரான் நாட்டின் போராட்டக்காரர்கள் மீண்டும் கைப்பற்றினர். இதனால், அவர்களுக்குப் பதிலடி தரும் விதத்தில், ஈரான் நாட்டின் இரண்டாவது முக்கியத் தலைவரும், படைத் தலைவருமான குவாஷிம் சுலைமானியினை, ஈராக் நாட்டில் உள்ள பாக்தாத் விமான நிலையத்தின் அருகில் வைத்து, டிரோன் மூலம் சுட்டுத் தள்ளியது அமெரிக்கா.

இதனால், அந்தத் தாக்குதலில் சுலைமானி உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஈரான் அதிபர் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அதற்குப் பதிலடி தரும் விதமாக ஈரானில் உள்ள 52 புராதண இடங்கள் மீது, தாக்குதல் நடத்தப்படும் என, டிரம்ப் தெரிவித்தார்.

இந்நிலையில், மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் உருவானது. உலகில் உள்ளப் பொதுமக்கள், மூன்றாம் உலகப் போர் உருவாக உள்ளது என, சமூக வலைதளங்களில் தங்களுடையக் கருத்துக்களைப் பதிவு செய்தனர். #WWIII என்ற ஹேஸ்டேக்கில் மொத்தம் 30 லட்சம் பேருக்கும் அதிகமானோர், டிவீட் செய்தனர். அமெரிக்காவில் போர் வேண்டாம் என, உள்ளூர் மக்களே போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், ஜனவரி 7ம் தேதி அன்று, குவாசிம் சுலைமானியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில், பல லட்சம் பேர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு, தங்களுடைய தலைவனுக்கு இறுதி மரியாதையைச் செய்தனர். அவருடைய பூத உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், ஈரான் தன்னுடைய இராணுவத்தின் மூலம் 12க்கும் மேற்பட்ட ஏவுகணைகளைப் பயன்படுத்தி, ஈரான் நாட்டினைச் சுற்றியுள்ள அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், இரண்டு அமெரிக்க நிலைகள் மோசமான தாக்குதலுக்கு உள்ளாகியதாக, அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இருப்பினும், பாதிப்புகள் பற்றி விரைவில் அறிக்கையை வெளியிடுகிறேன் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

ஆனால், ஜனவரி 8ம் தேதி, ஈரானில் உள்ள செய்தி ஊடகங்கள் ஈரான் நடத்தியப் பதிலடித் தாக்குதலில், சுமார் 80 அமெரிக்க வீரர்கள் இறந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர். இதற்கு அமெரிக்கா மறுப்புத் தெரிவித்து வருகின்றது. இவ்வளவுப் பிரச்சனைகளுக்கும் மூல காரணமாக இருப்பது ஈரான் நாட்டின் எண்ணெய் வளம். ஈராக் நாட்டில் இருந்த சதாம் உசேனை தூக்கிலிட்டப் பின், அந்நாட்டின் எண்ணெய் வளங்கள் பெரும்பாலும் அமெரிக்காவின் நேரடி மற்றும் மறைமுகக் கட்டுப்பாட்டில் உள்ளன. மேலும், பிற நாடுகளும் அமெரிக்காவின் நிபந்தனைகளின் படியே கச்சா எண்ணையை விற்கின்றன. ஆனால், ஈரான் அப்படியில்லை.

அங்குள்ள அளவில்லா எண்ணை வளத்தினால் தான் இவ்வளவுப் பிரச்சனைகளும் ஏற்பட்டு வருகின்றது. மேலும், ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில், நல்ல உறவு உண்டாக இருந்தது ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியும், 2013ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த பாரக் ஓபாமாவும் தான். ஆனால், தற்பொழுது அமெரிக்க அதிபராக வந்துள்ள டிரம்ப் தான், இவ்வளவு பிரச்சனைகளையும் மீண்டும் உருவாக்கி உள்ளார்.

HOT NEWS