ஈரான்-அமெரிக்கா இரண்டு நாடுகளின் இராணுவ பலம் என்ன?

14 January 2020 அரசியல்
usavsiran.jpg

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே, போர் மூலம் அபாயம் உள்ளது. இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிப் பேசி வருகின்றனர். ஈரான் நாட்டு இராணுவம், அமெரிக்கப் படைகளின் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றது. மேலும், ஒரு படி மேலாக, உக்ரைன் நாட்டின் விமானத்தினை சுட்டு வீழ்த்தியுள்ளது. இதனால், 176 அப்பாவி பயணிகள் இந்த தாக்குதலில் பலியாகி உள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், நாங்கள் தவறுதலாக அந்த விமானத்தினை சுட்டுவிட்டோம் எனவும், மனிதத் தவறுகளால் இந்தத் தாக்குதல் நடைபெற்று உள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இரு நாடுகளும் தங்களுடைய இராணுவ பலத்தினை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளன. இரு நாடுகளுக்கும் உள்ள இராணுவ பலம் பற்றியும், யார் பலம் வாய்ந்தவர் என்பது பற்றியும் விவரிக்கின்றது இந்த கட்டுரை.

உலகின் வல்லரசு நாடாக அமெரிக்க உள்ளது. அந்நாட்டின் பொருளாதாரமானது, பல்வேறுத் துறைகளைச் சார்ந்தது. மென்பொருள் உற்பத்தி, சினிமா, வர்த்தகம், விவசாயம், எண்ணெய் உட்பட பல்வேறு துறைகளிலும், அமெரிக்க நாடானது முதலிடத்தில் உள்ளது. ஆனால், ஈரானின் பொருளாதாரமே அங்குள்ள எண்ணெய் கிணறுகளை நம்பியே உள்ளது. ஈரான் மீது, அமெரிக்க விதித்தப் பொருளாதாரத் தடையின் காரணமாக, அந்நாடானது கடும் நெருக்கடியில் உள்ளது எனலாம்.

ஒவ்வொரு வருடமும், அமெரிக்க அரசாங்கம் தன்னுடைய பட்ஜெட்டில் 610 பில்லியன் அமெரிக்க டாலர்களை, தன்னுடைய நாட்டின் இராணுவத்திற்காக ஒதுக்குகின்றது. இது அந்த நாட்டின் பட்ஜெட்டில், 3.1% ஆகும். ஆனால், ஈரான் நாடானது, தன்னுடைய நாட்டின் இராணுவத்திற்காக 14 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்குகின்றது. இது ஈரானின் பட்ஜெட்டில், 2.5% ஆகும்.

தரைப்படை


அமெரிக்காவில் உள்ள, மொத்த இராணுவ வீரர்களின் எண்ணிக்கை சுமார் 12 லட்சத்து 81 ஆயிரம். ஈரானிடம் மொத்தம் 5 லட்சத்து 50 ஆயிரம் படை வீரர்கள் உள்ளனர். ஆனால், அமெரிக்கா நினைத்தால், தன்னுடையக் கூட்டுப் படைகளுடன் சேர்த்து, மொத்தம் 7 முதல் 8 கோடி பேர் வரை ஒன்று திரட்ட இயலும். ஆனால், ஈரான் நாட்டினால் அவ்வளவுப் பெரிய படையினை திரட்ட இயலாது. இஸ்லாமிய நாடுகள் ஈரானிற்கு ஒத்துழைப்பு அழைத்தால், அதிகபட்சமாக இரண்டரை கோடி வீரர்களை மட்டுமே திரட்ட இயலும். அதுவும், அமெரிக்காவிற்கு எதிராக இயலுமா என்பது சந்தேகமே!

அமெரிக்க இராணுவத்திடம் உள்ள தளவாடங்கள் பற்றி சற்றுப் பார்ப்போம். அமெரிக்காவிடம் மொத்தம், 6393 பீரங்கிகள் உள்ளன. ஈரான் அரசாங்கத்திடம் மொத்தம் 2531 பீரங்கிகளே உள்ளன. அதே போல், அமெரிக்காவிடம் 41,760 போர் வாகனங்களும், ஈரானிடம் 1,625 வாகனங்களும் உள்ளன. 3,269 ஆர்ட்டிலரி வாகனமும், 950 தானியங்கி ஆர்ட்டிலரி வாகனமும் அமெரிக்காவிடம் உள்ளன. ஆனால், ஈரானிடம் 4,096 ஆர்ட்டிலரி வாகனங்களும் 570 தானியங்கி ஆர்ட்டிலரி வாகனங்களும் உள்ளன. அமெரிக்காவிடம் 1197 ராக்கெட் ஏவும் வாகனங்கள் உள்ளன. ஆனால், ஈரானிடம் 1438 ராக்கெட் ஏவும் வாகனங்கள் உள்ளன.

விமானப் படை


அமெரிக்காவின் விமானப் படையினைப் பற்றி சற்றுப் பார்ப்போம். அமெரிக்க விமானப் படையில் மொத்தம் உள்ள விமானங்களின் எண்ணிக்கை 12,304. இவைகளில் 457க்கும் மேற்பட்ட போர் விமானங்களும், 4889க்கும் அதிகமான ஹெலிகாப்டர்களும் உள்ளன. 2192 பல்வகை விமானங்களும், 587 தாக்கும் விமானங்களும் உள்ளன.

ஆனால், ஈரானிடம் மொத்தம் 850க்கும் நிகரான விமானங்களே உள்ளன. அதில், 130 போர் விமானங்களும், 324க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களும் அந்நாட்டின் விமானப்படையில் இடம் பெற்றுள்ளன. 73 பல்வகை விமானங்களும், 52 தாக்கும் விமானங்களும் உள்ளன.

கடற்படை


அமெரிக்கக் கடற்படையில் உள்ள, கப்பல்களின் தோராயமான எண்ணிக்கை 437. இதில் விமானம் தாங்கிக் கப்பல்களின் எண்ணிக்கை 20. அழிக்கும் கப்பல்களின் எண்ணிக்கை 85. 71 நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன.

ஆனால், ஈரான் கடற்படையில் உள்ள கப்பல்களின் எண்ணிக்கை 406. அதில் 6 ப்ரிகேட்ஸ் கப்பல்களும், 3 கோர்வீட்டீஸ்ம் உள்ளன 40 நீர்மூழ்கி கப்பல்களை ஈரான் இராணுவம் வைத்துள்ளன.

இரகசிய ஆயுதங்கள் பலவற்றினை அமெரிக்க இராணுவம் வைத்துள்ளன. ஆனால், ஈரானிடம் அத்தகைய ஆயுதங்கள் இருந்தாலும், அமெரிக்காவின் அளவிற்கு இருப்பதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. இந்த அளவீடுகளை வைத்துப் பார்க்கும் பொழுது, அமெரிக்காவின் பாதி அளவிற்கு கூட, ஈரானிடம் படை பலம் இல்லை என்பது புலனாகின்றது.

வல்லரசு நாடான அமெரிக்காவிடம் 1600 அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால், ஈரான் வசம் அணு ஆயுதங்கள் இல்லை.

HOT NEWS