ப ரஞ்சித் தயாரிப்பில், அட்டக்கத்தி தினேஷ், ரித்விகா, ஆனந்தி, முனீஸ்காந்த் உட்பட பலர் நடித்திருக்கும் திரைப்படம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு. சுருக்கமாக குண்டு.
படத்தின் நாயகன், பழையப் பொருட்களை வாங்கும் இரும்புக் கடையில் வேலைப் பார்க்கும் ஆசாமி. அவனுடைய அதிகபட்ச ஆசையே, சொந்தமாக ஒரு லாரி வாங்க வேண்டும் என்பது தான். அவன் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன். அவனை மேல்சாதிப் பிரிவினைச் சேர்ந்த ஆனந்தி காதலிக்கின்றார்.
மாரிமுத்து நடத்தும் கடையில் வேலைப் பார்க்கும் தினேஷ், ஒரு நாள் லாரியில் பொருட்களை ஏற்றிக் கொண்டு வருகின்றார். அப்பொழுது, அவருடைய லாரிக்கு எதிர்பாராத விதமாக ஒரு மர்ம பொருள் வந்து விடுகின்றது. அது இரண்டாம் உலகப் போர் காலத்தில் உருவாக்கப்பட்ட குண்டு. அது வெடித்தால், பெரிய பாதிப்பு ஏற்படும். அதனை எப்படி கதாநாயகன் அழித்தார், அதனைத் தேடும் கும்பல் என்ன செய்தது, ஆனந்தி மற்றும் தினேஷின் காதல் கை கூடியதா என, பார்ப்பவர்களை பதற்றத்துடன் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் அதியன் ஆதிரை.
சும்மா சொல்லக் கூடாது. தினேஷின் நடிப்பு, நாளுக்கு நாள் மேம்பட்டு வருகின்றது எனக் கூறலாம். அந்த அளவிற்கு மிக எதார்த்தமாக நடித்து, நம்மைப் படத்துடன் ஒன்ற வைக்கின்றார். ரித்விகாவினை பிக்பாஸ்2 நிகழ்ச்சி முடிந்த பின் திரையில் காண இயலவில்லை. ஆனால், இந்தப் படத்தில் கிடைத்த வாய்ப்பினை, மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி, வருகின்ற ஒவ்வொரு நொடியும் சிக்சர் அடிக்கின்றார்.
இந்தப் படத்தில் வரும் பாடல்கள் மனதை தீண்டிச் செல்கின்றன. ஆயுதத்தால் அமைதி வராது என்பதை எப்படிக் கூற வேண்டுமோ, அப்படிக் கூறியும் உள்ளனர். தமிழ் சினிமாவிற்கு, இந்தப் படம் ஒரு புதிய பாதையை உருவாக்கியுள்ளது எனலாம்.
படத்தில் குறை என்றுக் கூறுவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும், ஏனோ படத்தினை ஒரு முறைப் பார்க்கலாம் எனக் கூற வைக்கின்றது. மொத்தத்தில் குண்டு வெடித்தது.