தமிழகத்தில் மூன்றாவது அணி அமைவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரிகின்றது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், திமுக, அதிமுக இடையேக் கடுமையானப் போட்டி ஏற்பட்டு உள்ளது. இதில், திமுக அருதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. திமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. மேலும், அக்கட்சிகளுக்கான இடங்களை ஒதுக்கீடும் செய்யப்பட்டு முடிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன், தேர்தல் அறிக்கை மற்றும் தேர்தலில் கட்சிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்த தகவல்களையும் வெளியிட, திமுக முடிவு செய்துள்ளது. இந்த சூழலில், அதிமுகவில் இருந்து வந்த சலசலப்புகள் அடங்கியுள்ளன. சசிகலாவின் வருகையும் நடந்து விட்ட நிலையில், அக்கட்சியினரிடம் பெரிய அளவில் பரபரப்பு இல்லை என்பதை கூறலாம். சென்னைக்கு வந்த நாளினைத் தவிர்த்து, மற்ற நாட்களில் சசிகலாவின் ஆதரவாளர்கள் பெரிய அளவில் செயல்படவில்லை.
இதனால், எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி இருப்பதை நம்மால் உணர முடிகின்றது. பாமகவிற்கும் அதிமுகவிற்கும் இடையில் இருந்து வந்தத் தொகுதிப் பங்கீடானது, தற்பொழுது சமரசமாக முடிவிற்கு வந்துள்ளது. இதனால், பாமக, அதிமுக, பாஜக கூட்டணியானது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அத்துடன், சிறியக் கட்சிகளான கருணாஸின் கட்சி, சரத்குமாரின் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்க அதிமுக திட்டமிட்டு வருகின்றது. தற்பொழுது வரையிலும், தேமுதிக பக்கம் அதிமுகவினர் செல்லவே இல்லை.
தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும் செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது, இதனை ஆதங்கமாக கொட்டியிருந்தார். இதனை வைத்துப் பார்க்கும் பொழுது, தேமுதிகவினை அதிமுக கழற்றிவிட்டதாகவே தெரிகின்றது. இதனால், தேமுதிக தற்பொழுது தனித்துத் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது. மக்கள் நீதி மய்யத்துடன் திமுக கூட்டணி வைக்குமா என்றக் கேள்வி எழுந்து வந்த நிலையில், தனித்துப் போட்டியிட கமல்ஹாசனும் முடிவு செய்துள்ளாராம்.
ஏற்கனவே, தன்னுடைய கட்சியானது திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்காது எனவும், பிற கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் வாய்ப்பு உள்ளது என சீமான் கூறியிருந்தார். அதனை வைத்துப் பார்க்கும் பொழுது, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும், தேமுதிகவும் நாம் தமிழருடன் கூட்டணி வைத்துத் தேர்தலை சந்திக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு கூட்டணி வைக்கும் பட்சத்தில், இது மூன்றாவது அணியாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இருப்பினும், இந்தக் கூட்டணியால் அதிமுக அல்லது திமுகவின் வாக்கு வங்கியினை அசைக்க முடியாது என்பது தான் நிதர்சணமான உண்மை.