இந்தியர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில், இனி இஸ்ரோவின் நேவிகேஷன் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்த இயலும் வகையில், வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை, இந்தியா மட்டுமின்றி உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில், அமெரிக்காவின் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு, அமெரிக்காவிற்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஒப்பந்தத் தொகையினை செலுத்த வேண்டியது அவசியம். இதனைக் கருத்தில் கொண்டு, இந்தியாவிற்க்கு என தனியாக ஒரு தொழில்நுட்பத்தினை உருவாக்க இஸ்ரோ முடிவெடுத்தது.
அதன்படி, NavIC (an acronym for NAVigation with Indian Constellation) என்ற தொழில்நுட்பத்தினை உருவாக்கி அசத்தியது இஸ்ரோ. மேலும், இதற்கான செயற்கைக்கோளினையும் விண்ணில் செலுத்தியது. இந்தத் தொழில்நுட்பத்தினை நடைமுறைப் பயன்பாட்டிற்கு, எவ்வாறு கொண்டு வருவது உள்ளிட்ட சில சிக்கல்கள் இருந்ததை அடுத்து, சில மாதங்களாக பரிசோதனையில் இருந்து வந்தது. இந்நிலையில், தற்பொழுது பரிசோதனைகள் முடிந்து பயன்படுத்த தாயாராக உள்ளதாக, இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தொழில்நுட்பத்தினை ஜிபிஎஸ் தொழில்நுட்பத்திற்குப் பதிலாக, இந்தியாவில் உள்ள அனைவரும் பயன்படுத்த இயலும். இந்த தொழில்நுட்ப வசதியானது, தற்பொழுது வெளியாக உள்ள ஓப்போ, ரெட்மீ மற்றும் விவோ நிறுவனங்களின் போன்களில் உள்ளது. மேலும், அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் விரைவில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.