நடிகர் விஜயின் வீட்டில் விசாரணை நடத்திய வருமான வரித்துறை, அது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
நடிகர் விஜய், ஏஜிஎஸ் என்டெர்டெயின்மெண்ட் நிறுவனம், பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில், கடந்த மாதம், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில், பிகில் படத்திற்காக நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்ட சம்பளம் உட்பட, பல விஷயங்களில் முறைகேடு நடந்திருப்பதாக கூறினர். மூன்று நாட்களாக நடைபெற்ற சோதனையில், அன்புச்செழியன் வீட்டில் இருந்து, 77 கோடி ரூபாய் ரொக்கப் பணம், தங்க நகைகள் மற்றும் பத்திரங்களைக் கைப்பற்றி சோதனை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்றும் விஜயின் வீட்டிற்கு வருமான வரித்துறையினர் சென்றனர். எட்டு அதிகாரிகள் இந்த முறை, அவருடைய வீட்டிற்குச் சென்றனர். அவர்கள், விஜயின் சம்பளம் பற்றியக் கணக்குகள் குறித்து பேசியுள்ளனர். அதில், விஜய்க்கு பிகில் படத்திற்காக 50 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளது எனவும், அதற்கான வரியும் முறையாக செலுத்தப்பட்டு உள்ளது எனவும் கூறியுள்ளனர்.
அதே சமயம், மாஸ்டர் படத்திற்காக 80 கோடி ரூபாயானது, சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது எனவும், அதற்கும் வருமான வரியானது முறையாகக் கட்டப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளனர். இதனால், விஜய் மீது எவ்வித வருமான வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டும் இல்லை. ஆனால் விஜய்யின் சம்பளத்தினைக் கேட்டு, பலரும் பெருமூச்சு வாங்கி வருகின்றனர்.