நடிகர் விஜய்க்கும், இந்த வருமான வரித்துறைக்கும் விட்டக் குறையோ, தொட்டக் குறையோ உள்ளது போல. சென்ற மாதம் தான், விஜயின் வீட்டிலும், அவரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், இன்றும் அவர் வீட்டில் ஐடி ரெய்டு நடைபெற்றுள்ளது.
பிகில் படத்தில் அதிகளவிலானப் பணத்தினை மறைத்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன், படத் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவனம் உள்ளிட்டோருக்கு சொந்தமான, அலுவலகங்கள், வீடுகள், நிறுவனங்களில் ஐடி துறையானது சோதனை நடத்தியது. அதில், விஜயிடம் இரண்டு நாட்கள் விசாரணை மேற்கொண்டனர்.
அன்புச்செழியன் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்தில் மூன்று நாட்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அன்புச்செழியன் வீட்டில் இருந்து 77 கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்ட சம்பளத்தில் குளறுபடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், ஏஜிஎஸ் நிறுவனத்தின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், விஜயிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து சோதித்து வந்தனர்.
இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள விஜயின் வீட்டில் இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர் ஐடி துறையினர். இதில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து, சோதனையும் விசாரணையும் நடைபெற்று வருவதாகவும், இதில் எட்டு பேர் ஈடுபட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.