இத்தாலியில் அதிகமானோர் ஒரே நாளில் கொரோனா வைரஸால் பலி! 14 மாகாணங்களுக்கு சீல்!

09 March 2020 அரசியல்
covid19latest.jpg

இத்தாலியில், ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக, 133 பேர் பலியாகி உள்ளனர். இது இத்தாலியினை உலுக்கி உள்ளது.

சீனாவில் இருந்து உலகம் முழுக்கப் பரவி உள்ள இந்த கொரோனா வைரஸ் காரணமாக, தற்பொழுது வரை சுமார் 100க்கும் அதிகமான நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், ஒரு லட்சம் பேர், இந்த நோய் தொற்று உள்ளவர்களாக கண்டறியப்பட்டு உள்ளனர். இந்த நோயால் ஐரோப்பிய நாடுகளில், இத்தாலி நாடு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

அந்நாட்டில் இதுவரை, ஒன்றரை கோடி பேர் தீவிரமாக அரசாங்கத்தால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அந்நாட்டின் வடக்குப் பகுதியானது, தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றது. அந்த பகுதியின் எல்லைப் பகுதிகளுக்கு, இத்தாலி அரசாங்கம் சீல் வைத்துள்ளது. இதனால், அந்தப் பகுதிக்குள் உள்ளே நுழையவோ அல்லது வெளியில் செல்லவோ அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

இத்தாலி நாட்டின் வடக்குப் பகுதியில், இராணுவம் களமிறக்கப்பட்டு எல்லைப் பகுதிகள் கண்காணிக்கப்படுகின்றன. அங்கு வசிக்கின்ற மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. விதிகளை மீறினால் கைது செய்யப்படுவர் என, இத்தாலி பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால், இத்தாலி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இத்தாலியின் 14 மாகாணங்களுக்கு, சீல் வைக்கப்பட்டுள்ளது.

அம்மாகாணங்கள், இராணுவம் மற்றும் மருத்துவக் குழுக்களின் தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர். தொடர்ந்து, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தரமான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகின்றது. சீனாவினைத் தொடர்ந்து, இத்தாலியில் தான் இந்த வைரஸால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, சர்வதேச சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் நடைபெறுவதாக இருந்த விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் அனைத்தும், மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கடைகளுக்குத் தேவையில்லாமல் செல்லக் கூடாது, பொது இடங்களில் கூடக் கூடாது. அநாவசியமாக, வீட்டினை விட்டு வெளியில் வரக் கூடாது, டீக் கடைக்குச் சென்றால், ஒரு மீட்டர் இடைவெளி விட்டு அமர வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விதிகளை மீறுபவர்களுக்கு, மூன்று மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

HOT NEWS