பேய் படம், விளையாட்டுப் படம், வடசென்னைப் படம் என மூன்றையும் சேர்த்து உருவாக்கியத் திரைப்படமே ஜடா திரைப்படம். வடசென்னை என்றால், தனுஷ் நடித்த வடசென்னைக்குப் போக வேண்டாம். வடசென்னையைச் சார்ந்த படமாக எடுத்துக் கொள்ளவும்.
கால்பந்து விளையாட்டினை மூச்சாக கொண்டவர் நடிகர் கதிர். வடசென்னைப் பகுதியினைச் சேர்ந்தவர். இவரை எப்படியாவது நன்றாக விளையாட வைத்து, ஒரு அரசாங்க வேலையில் உட்கார வைத்து விட வேண்டும் என்கின்ற முயற்சியில் அவருடைய கோச். ஆனால், கதிருக்கோ, செவன்ஸ் எனப்படும் கால்பந்தின் மீது தான் அதிக ஈர்ப்பு. அதில் கலந்து கொண்டு விளையாட வேண்டும் என ஆசையும்படுகின்றார்.
தன்னுடைய கோச்சிடம் சென்று, செவன்ஸ் ரக கால்பந்து பற்றி கூறுகின்றார். முதலில் மறுப்புத் தெரிவிக்கும் கோச், கதிர் கூறும் பிளாஷ்பேக்கினைக் கேட்ட பின், செவன்ஸ் கால்பந்து விளையாட அனுமதிக்கின்றார். செவன்ஸ் விளையாட்டில் கதிர் சாதித்தாரா, காதல் கை கூடியதா என்பது தான் மீதிக் கதை.
இந்தப் படத்தில் செவன்ஸ் விளையாட்டிற்கு பயிற்சி அளித்தவர் கிஷோர். அவரால் செவன்ஸ் ஆட்டத்தின் மீது ஈர்ப்பு ஏற்படுகின்றது. ஒரு செவன்ஸ் விளையாட்டுப் போட்டியின் பொழுது, கிஷோரைக் கொன்று விடுகின்றனர். அவருக்காக செவன்ஸ் விளையாட வேண்டும் என பிளாஸ்பேக் பற்றி கூறுகின்றனர். திடீரென்று, படத்தில் எதிர்பாராத விதமாக, பேயெல்லாம் வருகின்றது. விளையாட்டும் வருகின்றது. அவ்வப்பொழுது, வடசென்னைப் பற்றிய விஷயமும் வருகின்றது.
படத்தில் யோகிபாபு இருக்கிறாரேத் தவிர, அவருடைய காமெடி இல்லை. ஏதோ, வாங்கியப் பணத்திற்கு தலையைக் காட்டியிருக்கின்றார் எனக் கூறலாம். படத்தின் பின்னணி இசை சுமார் ரகம். பாடல்கள் படு மோசம். ஒளிப்பதிவாளரின் முயற்சியால் பாடல்கள் பார்க்கும் விதத்தில் உள்ளன. கதாநாயகிக்கு இப்படத்தில் பெரிய அளவில் வேலை இல்லை. இந்தப் படத்திற்கு கதாநாயகி இல்லாமல் இருந்திருந்தால், பரவாயில்லை என்று தோன்றுகின்றது.