நிர்பையா வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஜனவரி 22ல் தூக்கு தண்டனை!

08 January 2020 அரசியல்
nirbhayacase.jpg

நிர்பையா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு, ஜனவரி 22ம் தேதி அன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி அன்று, திரைப்படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு தன்னுடைய ஆண் நண்பருடன் திரும்பி வந்து கொண்டிருந்தார் பிஸியோதெரபி மாணவி. அவரைப் பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து, அவருடைய நண்பரையும் கொடூரமாகத் தாக்கி, இருவரையும் பேருந்தில் இருந்து தூக்கி வீசினர்.

இந்த குற்றச் செயலில், பஸ் டிரைவர் ராம் சிங், முகேஷ் சிங், வினய் ஷர்மா, பவன் குப்தா, அக்ஷய் குமார் சிங் மற்றும் 17 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டனர். இந்தியாவில் சிகிச்சை அளிக்கப்பட்டப் போதிலும், உயர்தர சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு மாணவி நிர்பையா அழைத்துச் செல்லப்பட்டார்.

இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி டிசம்பர் 29ம் தேதி உயிரிழந்தார். இதனால், நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. பெண்களுக்கான அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில், ராம் சிங் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 17 வயதுடைய அந்த சிறுவனை, மூன்று ஆண்டுகள் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் இருக்கும் படி, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. செப்டம்பர் 13ம் தேதி 2013ம் ஆண்டு, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை அளித்தது உச்சநீதிமன்றம். 2017ம் ஆண்டு, நானகு பேரும் தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்தப் பின்னர், தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.

இந்நிலையில், திஹார் சிறையில் உள்ள தூக்குத் தண்டனை வழங்கும் ஊழியர், ஓய்வு பெற்றதால், தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து, நிர்பையாவின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், அது குறித்த வாரண்ட் எங்களிடம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறினர். இதனையடுத்து, வருகின்ற ஜனவரி 22ம் தேதி அன்று, தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

அதற்கு முந்தைய நாள் வரை, குற்றவாளிகள் தங்களுடைய கருணை மனுக்களை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது வரை, சுமார் 4 மறு சீராய்வு மனுக்களை ஒவ்வொரு குற்றவாளியும் தாக்கல் செய்து இருந்தனர். ஆனால், அவைகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS