இன்று அமெரிக்காவின் அதிபராக ஜோ பிடன் பதவி ஏற்க உள்ளார். அவருடைய பதவி ஏற்பு விழாவிற்காக, தற்பொழுது உச்சகட்ட பாதுகாப்பானது வழங்கப்பட்டு வருகின்றது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக்கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோபிடனும், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீஸூம் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றனர். இதற்கு நடப்பு அதிபரான டொனால்ட் ட்ரம்ப் கடும் எதிர்ப்பினை தெரிவித்தார். தன்னுடைய தோல்வியினை ஏற்காமல், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்நிலையில், கடந்த வாரம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைப் பகுதியில் கடுமையான போராட்டம் வெடித்தது. டிரம்பின் ஆதரவாளர்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். இது அமெரிக்காவின் கருப்பு நாளாகவேப் பார்க்கப்பட்டது. இதற்கு, உலகத் தலைவர்கள் பலரும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில், இன்று அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடனும், துணை அதிபராக கமலா ஹாரீஸூம் பதவி ஏற்க உள்ளனர்.
இந்த நிகழ்விலும் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக, கடுமையான பாதுகாப்பானது தற்பொழுது ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்தப் பாதுகாப்பு குறித்து, உளவுத் துறையானது தீவிர ஆய்விலும், கண்காணிப்பிலும் ஈடுபட்டு உள்ளது. முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடைபெறும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. அதில் பேசிய ட்ரம்ப், அமெரிக்காவின் மதிப்பானது அதிகரித்துள்ளது எனவும், போருக்கே செல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி நடைபெற்றது எனவும் பெருமிதம் தெரிவித்தார்.