ஜான் விக் 3 திரை விமர்சனம்!

19 May 2019 சினிமா
ind-vs-sl.jpg

இந்தப் படத்தின் முந்தைய இரண்டு பாகங்களுமே, ஹாலிவுட் பாக்ஸ் ஆபிசில் சக்கைப் போடு போட்டன. அந்த அளவிற்கு இப்படம் நல்ல வரவேற்பை, ரசிகர் மத்தியில் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் மூன்றாம் பாகம் சென்ற வாரம் வெளியானது. உலகம் முழுக்க வெளியான நிலையில், இப்படத்திற்கும் வழக்கம் போல் அல்லாமல், அதற்கும் அதிகமாகவே வரவேற்பு கிடைத்துள்ளது.

இம்சை அரசன் படம் பார்த்திருப்போம். அதில் ஒரு வரி வரும். ஒரு புறாவுக்காக போரா? அக்கப்போராக அல்லவா உள்ளது என்று? அதே போல் இந்தப் படமும். தன்னுடைய வளர்ப்பு நாயைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் நாயகனின் லட்சியம் நிறைவேறியதா இல்லையா என்பதை கடந்த இரண்டு பாகங்களில், தெளிவாகக் காட்டியிருந்தனர். இந்நிலையில், இந்த மூன்றாம் பாகத்தில், எதைக் காட்ட உள்ளனர் என, அனைவரும் நினைத்த நிலையில், இரண்டாம் பாகத்தில், ஒரு சீன் வரும். அதைப் பற்றிப் பேசுவதற்கு முன், இந்த ஜான் விக் சீரீசினை சுருக்கமாகப் பார்போம்.

ஜான் விக் உலகளவில் செயல்பட்டு வரும், கொலைகாரக் கும்பலில் ஒரு உறுப்பினர். இந்த அமைப்பில், ரோட்டில் பிச்சை எடுப்பவர்கள் முதல், கோடீஸ்வர முதலாளிகள் வரை உள்ளனர். இவர்களுக்கு என்று, ஒரு சில சட்ட விதிகள் உண்டு. அந்த சட்ட விதிகளை மீறும் பட்சத்தில், அவர்கள் மீது அந்தக் கொலைகார அமைப்பு நடவடிக்கை எடுக்கும். ஜான் விக்கின் நாயையும், மனைவியையும் கொன்று விடுகின்றனர். அவர்களை இவரும் பழி வாங்கிவிடுகிறார். இதில் என்ன? ஆச்சர்யம் இருக்கிறது. இது தான் ஆண்டாண்டு காலமாக நடப்பது தானே, என்று நீங்கள் நினைக்கலாம். விஷயமே அவர் கொலை செய்த இடம் தான். வில்லனை அந்த அமைப்பிற்குச் சொந்தமான ஹோட்டலில் வைத்துக் கொன்றுவிடுகின்றார். இதனால், இவர் சட்டத்தை மீறிவிட்டார் என அந்த அமைப்பின் தலைவர் கருதுகிறார். இவருடையத் தலைக்கு சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் விலையாக வைக்கப்படுகிறது.

இத்துடன் இரண்டாம் பாகம் முடிந்தது. இந்நிலையில், மூன்றாம் பாகம் ஆரம்பித்த உடனேயே, இவருடையத் தலைக்கு வைக்கப்பட்ட விலையின் மதிப்பு 14 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தப்படுகிறது. இதன் காரணமாக, ஒரு கூட்டமே, இவ்வளவுப் பெரிய பணத்திற்காக, இவரைக் கொல்லத் துரத்துகிறது. இவரும் அவர்களிடமிருந்து தப்பித்து ஓடுகிறார்.

சும்மா, சொல்லக்கூடாது. கடந்த இரண்டு பாகங்களை இட, இந்தப் பாகத்தில் ஆக்ஷன் காட்சிகள் தெறிக்கின்றன. கீனூ ரீவிஸ் 54 வயதானவர் என யாராவது, கூறினால், யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு மிக இளமையாக காட்சியளிக்கிறார். எது எப்படியோ, படம் நம்மை சீட்டோடு கட்டிப்போட்டு விடுகின்றனர்.

ஒரே ஒரு குறை, இந்தப் படம் தமிழில் வெளியாகவில்லை. எனவே, ஆங்கிலத்தில் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டியக் கட்டாயம் அனைவருக்கும். பார்த்து ரசியுங்கள்.

HOT NEWS