லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், கேவி ஆனந்த் இயக்கத்தில், நடிகர் சூர்யா, ஆர்யா, மோகன்லால், சமுத்திரகனி மற்றும் சாய்ஷா நடித்த காப்பான் திரைப்படம் தற்பொழுது 100 கோடி ரூபாயை தாண்டி, வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டு இருப்பதாக, அப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
படத்தின், வெற்றியைக் கொண்டாடும் விதத்தில், நடிகர் சூர்யா உட்பட பலரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர். இது குறித்து, படத் தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளா மற்றும் வெளிநாடுகளில் அதிரிபுதிரியான வசூல் சாதனை செய்துள்ளது காப்பான். தமிழக விவசாய அமைப்புகள் அனைத்திலிருந்தும், ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றது மகத்தான சாதனை.
அத்தனைத் தரப்பு ரசிகர்களிடமிருந்தும், குவியும் பாராட்டுக்கள் இன்னுமொரு சாதனை. இத்தனை சாதனைகளுக்கும் காரணமாய் இருந்த காப்பானின் அத்தனை நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், திரைப்பட விநியோகஸ்தர்களுக்கும், திரையறங்க உரிமையாளருக்கும், இந்த வெற்றியை அங்கீகரித்த ரசிகர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.
ஆதரவாய் இருந்த, ஆழமாய் ரசனையாய் விமர்சித்த ஊடக நண்பர்களான உங்களுக்கும், எங்கள் இதயப்பூர்வமான நெகிழ்ச்சி கலந்த நன்றி. லைகா நிறுவனம் தனது அடுத்தடுத்த, பெரிய முயற்சிகளை கம்பீரமாக தொடர, நல்ல நம்பிக்கையை விதைத்திருக்கும் காப்பான் படக் குழுவினருக்கு மீண்டும் நன்றி என, லைகா நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனை தற்பொழுது, சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில், கொண்டாடி வருகின்றனர்.