நடிகர் விக்ரமுக்கு என்ற ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அவர்களுடைய எதிர்ப்பார்ப்பும் இந்த மாதிரியான ஒரு ஸ்டைலீஸான திரைப்படம் தான். கடாரம் கொண்டான் விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள ஒரு பில்லா எனக் கூறலாம்.
அவ்வளவு ஸ்டைலாக நமக்குக் காட்சித் தருகிறார் விக்ரம். விபத்தில் சிக்கிய விக்ரமை, மருத்துவமனையில் சேர்க்கிறார் அபிஹாசன். அபிஹாசனின் மனைவி அக்ஷராஹாசன். அக்ஷராவைக் கடத்தி, அபிஹாசனை, விக்ரமை வெளியில் கொண்டு வா என யாரோ மிரட்டுகிறார்கள். யார் அவர்கள், விக்ரமுக்கும் அவர்களுக்கும் என்னத் தொடர்பு, கடைசியில் என்ன நடக்கிறது என்பது தான் கதை.
விக்ரமை ஸ்டைலாகக் காட்டத் தெரிந்த இயக்குநருக்கு, அவருடைய நடிப்பை முழுமையாகப் பயன்படுத்தத் தெரியவில்லை போல, அல்லது அவருக்கான கதாப்பாத்திரத்தின் அளவு அவ்வளவு தான் போல. இன்னும் நல்ல கனமான கதாப்பாத்திரத்தை அவருக்குத் தந்திருக்கலாம், அல்லது அவருடையக் கதாப்பாத்திரத்தை கனமானதாக மாற்றியிருக்கலாம். ஷங்கர், பாலா போன்ற அசுர இயக்குநர்களின் கதைக்கு விருந்து வைப்பவர் நம்ம விக்ரம். அவருக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு செய்திருந்தால் படம் மிக அருமையாக வந்திருக்கும்.
படத்தில், விக்ரமின் கதாப்பாத்திரம் என்ன என்பதை, படம் முடிந்தாலும் கண்டுபிடிக்க முடியாது. ஒருவேளை தயாரித்தவர் கமல்ஹாசன் என்பதால், அவர் படத்தை மனதில் வைத்து இயக்குநர் எடுத்துவிட்டார் போல. டபுள் ஏஜெண்ட், போலீஸ் ஆபிசர் என பல பரிணாமங்களுக்குள் விக்ரம் செல்கிறார். இருப்பினும், கடைசி வரை தெளிவாக இல்லை.
படத்தின் ஒளிப்பதிவாளர் எந்த ஆங்கிலப் படம் பார்த்து ரசித்தார் எனத் தெரியவில்லை. அந்த அளவிற்கு இந்தப் படத்தினை மிக அழகாகவும், பிரம்மாதமாகவும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இதிலிருந்தே படத்தின் பின்னணி இசை எப்படி இருக்கும் என யாரும் கூற வேண்டியதில்லை. வழக்கம் போல், மனிதர் பிஜிஎம்மில் விளையாடி இருக்கிறார். ஆனால், பாடல்கள் சுமார் ரகம்.
லாஜிக் பார்க்கமா, படத்தை ரசிக்கும் கூட்டத்திற்கு இந்தப் படம் ஒரு விருந்து. அவர்களுக்கு மட்டுமல்ல, விறுவிறுப்பான கதைகளை விரும்புபவர்களுக்கும் இந்தப் படம் விருந்து தான்.
படத்தில், விக்ரமை காட்டிலும், அபிஹாசனுக்கும், அக்ஷராஹாசனுக்குமே, அதிக காட்சிகள் உள்ளன. எது எப்படியோ, விக்ரம் நடிப்பில் ஒரு ஸ்டைலிசான படம்.
கடராம் கொண்டான் கதை கொண்டானா?