கைலாசாவின் புதிய பணம் பற்றிய முக்கிய அறிவிப்பினை, நித்தியானந்தா வெளியிட்டு உள்ளார்.
வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்று, கைலாசா நாட்டின் புதிய பணம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பினை வெளியிட உள்ளதாக அறிவித்து இருந்தார் நித்தியானந்தார். தற்பொழுது அது குறித்து சில தகவல்கள் அவர் வெளியிட்டு உள்ளார்.
அதன்படி, இந்து மதத்தினை அடிப்படையாகக் கொண்டு, மொத்தம் 56 நாடுகள் இருந்ததாகவும், அவைகளில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் மற்றும் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களை அடிப்படையாகக் கொண்டு கைலாசியன் டாலர் தயாரிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்து உள்ளார். இந்தப் பணமானது, தமிழ் முறைப்படி, கால் காசு, அரைக்காசு, ஒரு காசு, 2 காசு, மூன்று காசு, ஐந்து காசு, பத்து காசு என உருவாக்கப்பட்டு உள்ளது என்றார்.
இந்த நாணயங்கள் அனைத்தும் 11.66 கிராம் தங்கத்தால் ஆனவை எனவும், இவைகளையே உள்நாட்டில் பயன்படுத்திக் கொள்ள, வழங்க உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். ஒவ்வொரு நாணயத்திலும், சிவ லிங்கம், விஷ்ணு, நந்தி உள்ளிட்ட 36 வகை சின்னங்கள் பொறிக்கப்பட்டு இருக்கும் என்றுக் கூறியுள்ளார். இது தவிர்த்து பண்டமாற்று முறையும் அமல்படுத்தப்படும் என்றுத் தெரிவித்து உள்ளார்.
இந்தப் பணத்தினை தமிழில் காசு எனவும், சமஸ்க்ருதத்தில் ஸ்வர்ண முத்ரா, ஸ்வர்ண புஷ்பா எனவும் அழைப்பார்கள் என்றார். இதனை உருவாக்க எட்டு பிரம்மச்சாரிகள் உதவியதாகவும் தெரிவித்து உள்ளார். மேலும், கைலாசா நாட்டில் வசிப்பவர்களுக்கு, தங்க நாணயம் மட்டுமின்றி, வைகுண்டம், கைலாயம், சொர்க்கம் செல்வதற்கும் ஆன்மீகப் பணம் வழங்கப்படும் என்றுக் கூறியுள்ளார்.
தன்னுடைய நாட்டில் பிரம்மச்சரியம் இருக்கும் மாணவர்களுக்கு, குருவாக இருக்கின்ற காரணத்தால், உணவு, உடை, இருப்பிடம், கல்விக்குத் தேவையான அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் எனவும், உணவு என்பது இயற்கையின் அடிப்படைத் தேவை எனவும், எனவே நாட்டில் உள்ள அனைவருக்கும் உணவு இலவசமாக வழங்கப்படும் என்றுக் கூறியுள்ளார்.
மேலும், தன்னுடைய நாட்டின் பொருளாதார விஷயங்கள் குறித்தும், இந்தப் பணத்தின் புகைப்படத்தினையும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப் போவதாக அறிவித்து உள்ளார். இதற்காக, விநாயகருக்கும், ஸ்வர்ணபைரவர், லட்சுமி, வெங்கடேசப் பெருமாள், குபேரனுக்கு நன்றியும் தெரிவித்து உள்ளார்.