கைலாசா நாட்டினை ஆன்லைன் மூலம் சுற்றிப் பார்க்கலாம் எனவும், எங்கள் நாட்டிற்கு வருவதற்காக ஆன்லைனில் பதிவு செய்யலாம் எனவும், நித்தியானந்தா தெரிவித்து உள்ளார்.
தினமும் தன்னுடைய நாட்டினைப் பற்றியும், நாட்டின் சட்டத் திட்டங்கள் பற்றியும் தற்பொழுது யூடியூப் சேனல் மூலம் பேசி வருகின்றார் நித்யானந்தா. தனக்காக தனியாக கைலாசா என்ற நாட்டினையும், அதற்குத் தானே அதிபர் எனவும் அவர் கூறியும் உருவாக்கியும் இருக்கின்றார். இந்தியாவில் உள்ள பல மாநிலப் போலீசார், அவரை தேடி வருகின்ற நிலையில், யாராலும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அவர் எங்கு இருக்கின்றார் எனத் தெரியாத நிலையில், அவர் பதுங்கி இருக்கின்றார்.
அவரைக் கண்டுபிடிக்க இண்டர்போல் உதவியினையும், இந்திய அரசு நாடியிருக்கின்றது. இருப்பினும், அவரைக் கண்டுபிடிக்கவே இயலவில்லை. இந்த சூழலில், நித்தியானந்தா பேசுகையில், நான் இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டினை உருவாக்கி இருப்பதாகவும், அந்த நாட்டின் பணமாக தங்கத்தினைப் பயன்படுத்த உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். அதோடு, பாரம்பரிய முறைகளில், இங்கு ஆட்சி நடைபெறும் எனவும் கூறி வருகின்றார். சமீபத்தில் தன்னுடைய சத்சங்கத்தில் பேசிய அவர், தன்னுடைய நாட்டிற்கு வர விரும்புபவர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
தன் நாட்டிற்கு வர விரும்புபவர்கள், ஆஸ்திரேலியாவிற்கு சொந்த செலவில் வந்தால் போதும் எனவும், அங்கிருந்து தன்னுடைய கருட விமானத்தின் மூலம், தன்னுடைய நாட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவர் எனவும், அவர்களுக்கு அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார். முதற்கட்டமாக, தன்னுடைய நாட்டில் ஒரு லட்சம் நபர்களுக்கு குடியுரிமை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
தன்னை இந்தியாவில் வைத்து, பல நூறு முறை கொலை செய்ய முயற்சித்ததாகவும், என்னுடையப் பெயருக்குத் தொடர்ந்து கலங்கம் விளைவிப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். இதன் காரணமாக, தனக்காக ஒரு நாட்டினை உருவாக்கி இருக்கின்றேன் எனவும், அங்கு இந்துக்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். நான் இறந்த பின்னர், என்னுடைய சொத்துக்கள் அனைத்தும் இந்தியாவிற்குத் தான் சொந்தம் எனவும் கூறியுள்ளார்.
தன்னுடைய நாட்டிற்கு வருவதற்கு விருப்பம் உள்ளவர்கள், ஆன்லைனில் விசா பெறுவதற்கு அப்ளை செய்யலாம் எனவும், தன்னுடைய நாட்டில் அனைவரையுமே பரமசிவனாகத் தான் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தன்னுடைய நாட்டிற்கு இராணுவம் கிடையாது எனவும், சுதந்திரமாக வாழலாம் எனவும் கூறியுள்ளார். ஆன்லைனில் அப்ளை செய்தால், கர்நாடாகவில் உள்ள தன்னுடைய பிடதி ஆசிரமத்தில் இருந்து மெயில் அனுப்பப்படும் எனவும், அதன் மூலம் தன்னை வந்து தரிசிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
ஒரு நாளைக்கு 10 முதல் 20 நபர்களுக்கு தான் காட்சித் தர இருப்பதாகவும், நித்தியானந்தா தெரிவித்து உள்ளார். இதற்கு தற்பொழுது பலரும் விருப்பம் தெரிவித்து உள்ளதாகவும், விரைவில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.