விஜயின் பிகில் திரைப்படத்திற்கு முன்பே, நடிகர் கார்த்தி நடித்துள்ள கைதி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில், பிகில் படத்துடன் அத்திரைப்படமும் தீபாவளிக்கு முந்தைய வெள்ளியன்று வெளியானது.
இந்தப் படத்தில் பாடல்கள் கிடையாது. கதாநாயகி கிடையாது. ஆனால், நல்ல கதை உண்டு. திரைக்கதை உண்டு. ஒரு சில லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், யாராலும் இப்படத்தை ஒதுக்கி வைக்க முடியாது. அந்த அளவிற்கு நல்லதொரு படம் என்றுக் கூறினால் அது மிகையாகாது. இரவில் நடக்கும் திரைப்படம். ஆனால், நம்மால் அனைத்துக் கதாப்பாத்திரங்களையும் தெளிவாகப் பார்க்கும் வகையிலும், ரசிக்கும் வகையிலும் திரைப்படமாக்கி உள்ளனர்.
மாநகரம் திரைப்படத்திற்கு பின், லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படம் கைதி. இத்திரைப்படத்தில், சிறையில் இருந்து விடுதலையாகும் கைதியாக நடித்துள்ளார் நடிகர் கார்த்தி. பத்து வருடம் சிறைத் தண்டனை முடிந்து, சிறையில் இருந்து வெளிவரும் மனிதர் தான் கார்த்தி. 900 கிலோ எடையுள்ள போதைப் பொருட்களைப் பிடித்து, அதனை கமிஷனர் அலுவலகத்தில் மறைத்து வைக்கிறார். இதனை அறிந்த அந்தப் போதைப் பொருட்கள் கடத்தும் கும்பல், கமிஷனர் அலுவலகத்தில் இருப்பதைக் கைப்பற்ற முயற்சிக்கின்றது.
சந்தர்ப்ப சூழ்நிலையால், கார்த்தி ஏன் நரேனைக் காப்பாற்றுகின்றார். காவலர்களுக்கு என்ன ஆனது. போதைப் பொருட்களுக்கு என்ன ஆனது? கடத்த கும்பல் என்ன ஆனது என்பதனை பரபரப்பான கதையுடன் கூறியிருகிறார் இயக்குநர். பத்து வருடங்களுக்குப் பிறகு, வெளியே வரும் கார்த்தி தன் மகளைக் காணத் துடிக்கிறார். அவர் அவருடையக் குழந்தையுடன் பேசும் பொழுதும் சரி, அவருடைய பிளாஸ்பேக்கைப் பற்றிக் கூறும் பொழுதும் சரி, நம்மை அதிகமாகக் கவர்கிறார்.
படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும், படத்தின் பின்னணி இசையில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் சாம். சி.எஸ். படத்தின் கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ற, நடிகர்களைத் தேர்ந்தெடுத்ததாலோ என்னவோ, படம் பார்ப்பதற்கு உண்மையாக உள்ளது.
படத்தில் உள்ள லாஜிக் ஓட்டைகளை தூக்கிப் பிடிக்காமல், படத்தினை ரசித்தால் கைதி நம்மை கொள்ளையடிப்பான்.