ஒரு உண்மையான க்ரைம் த்ரில்லர் பார்க்க விரும்புபவர்கள், இந்த மாதம் வெளியாகி உள்ள காளிதாஸ் திரைப்படத்தினைப் பார்க்கலாம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, நடிகர் பரத் நடித்த படம் வெளியாகி உள்ளது மகிழ்ச்சியான விஷயம் தான். நல்ல நடிகர். கடும் உழைப்பாளி, இருப்பினும் கதைத் தேர்வு மற்றும் சரியான தேதி கிடைக்காததால் அவருடையப் படங்கள் தோல்வியடைந்து வந்தன.
இந்நிலையில், தற்பொழுது வெளியாகி உள்ள காளிதாஸ் திரைப்படம், மாபெரும் திருப்புமுனையாக, பரத்தின் கேரியரில் இருக்கும் என்றுக் கூறினால், அது மிகையாகாது.
படத்தின் ஆரம்பத்தில் தொடங்கும் சுவராஸ்யம், படத்தின் கடைசி நொடி வரைத் தொடர்கின்றது. ராட்சசன் படத்தினை அனைவரும் பார்த்திருப்போம். அந்தப் படத்தில், ஆரம்பம் முதல் இறுதி வரை, யார் தான் கொலை செய்கின்றார்கள் என, பதற வைக்கும் காட்சிகளுடன் படத்தினை நகர்த்தி இருப்பார்கள். படமும் ராட்சச வெற்றி பெற்றது. ஆனால், இதில் அனைத்துக் காட்சிகளுமே, அனைவரும் பார்க்கும் விதத்தில் வடிவமைத்து, கடைசி வரை யார் தான் குற்றவாளி என யோசிக்க வைத்திருப்பது அசத்தலான விஷயம்.
பரத் போலீஸ் இன்ஸ்பெக்டர். அவருடைய கட்டுப்பாட்டுக்குள் உள்ளப் பகுதியில், தொடர்ந்து மூன்று பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதில், பரத்திற்கு சந்தேகம் வருகின்றது. அந்த சந்தேகம் விசாரணையின் திசையையே மாற்றுகின்றது. அது உண்மையிலேயே தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக கொல்லப்பட்டு உள்ளார்களா என படம் விறுவிறுப்பாக செல்கின்றது.
சும்மா சொல்லக் கூடாது. படத்தில், மிகப் பக்குவப்பட்ட நடிப்பினை நடிகர் பரத் வெளிக்காட்டியுள்ளார். காவல்துறை உடையில் மிகக் கச்சிதமாக உள்ளார். படத்தின் பாடல்கள் ஹிட்டாகி இருந்தால், படத்திற்கு மாபெரும் விளம்பரம் தானாக ரசிகர்களிடம் கிடைத்து இருக்கும். படமும் நல்ல ரீச் கிடைத்திருக்கும்.
இயக்குநரின் உழைப்பு, படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகின்றது. பின்னணி இசை சிறப்பாக உள்ளது. ஒளிப்பதிவிற்கு ஏற்ற எடிட்டிங் படத்தின் மிகப் பெரிய பலம். மொத்தத்தில் காளிதாஸ் பரத்தின் பெயரைக் காப்பாற்றும்.