கள்ளக்குறிச்சி எம்எல்ஏவின் மனைவி, அவருடைய கணவர் பிரபுடன் செல்ல, நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு, அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்ற மாணவி சௌந்தர்யா என்றப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதற்கு அந்தப் பெண்ணின் தந்தை கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்தார். மேலும், தன்னுடைய மகளை ஆசைவார்த்தை காட்டி ஏமாற்றி விட்டதாகவும், அவர் கடத்தப்பட்டு திருமணம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். பின்னர், நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவினைத் தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கினை நீதிமன்றம் விசாரித்தது. அப்பொழுது நீதிமன்றத்தில் சௌந்தர்யா ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. அதற்காக, சௌந்தர்யா புதியதாக வீடியோ ஒன்றினை வெளியிட்டார். இருப்பினும், நீதிமன்றம் உத்தரவிட்டதால், நேற்று நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார். அப்பொழுது அவர் பேசுகையில், என்னை யாரும் ஏமாற்றவில்லை எனவும், நான் விருப்பப்பட்டே பிரபுவை திருமணம் செய்து கொண்டேன் எனவும் கூறினார்.
இவருடைய தரப்பு விவாதத்தினைக் கேட்ட நீதிமன்றம், அவர் தன்னுடைய கணவருடன் செல்ல அனுமதி வழங்கியது. மேலும், இந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை முடித்ததாக அறிவித்தது. மேலும், தன்னுடைய தந்தையுடன் உரையாடிய சௌந்தர்யா, எம்எல்ஏ பிரபுடன் சென்றுவிட்டார்.