எந்த ஷாவோ, சுல்தானோ, சாம்ராட்டோ மாற்றிவிட முடியாது! கமல் வீடியோ!

16 September 2019 சினிமா
kamalshah.jpg

ஹிந்தி திணிப்பு குறித்த, அமித் ஷாவின் சர்ச்சைப் பேச்சுக்கு நாடு முழுவதும் இருந்து, பலரும் தங்களுடைய எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், தற்பொழுது மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான திரு. கமல்ஹாசன் அவர்களும், தன்னுடைய கருத்தினைப் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து, சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசும் கமல்ஹாசன், பல ராஜாக்கள், தங்கள் ராஜாங்கத்தை விட்டுக் கொடுத்து உருவானது தான் இந்தியா. ஆனால், அவர்கள் விட்டுத் தர மறுத்தது கலாச்சாரத்தையும், தாய் மொழியையும். 1950ல் இந்தியா குடியரசு ஆன பொழுது, இந்த சத்தியத்தை அரசு மக்களுக்குச் செய்தது. அந்த சத்தியத்தை எந்த ஷாவோ, சுல்தானோ, சாம்ராட்டோ மாற்றிவிட முயற்சிக்கக் கூடாது.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை விட, நாங்கள் எங்கள் மொழிக்காகப் போராடத் துவங்கினால், அது பல மடங்கு பெரிதாக இருக்கும். அந்த ஆபத்து, இந்தியாவிற்கோ, தமிழ் நாட்டிற்கோ தேவையற்றது. பெரும்பாலான இந்தியர்கள், அவர்கள் மொழியில் தேசிய கீதத்தை பாடுவதில்லை. வங்காள மொழிப் பேசுபவர்களைத் தவிர. ஆனால், அதனை நாங்கள் சந்தோஷமாகப் பாடிக் கொண்டு இருக்கின்றோம், பாடிக் கொண்டு இருப்போம். காரணம் அதனை எழுதியக் கவிஞர் எல்லா கலாச்சாரத்திற்கும், எல்லா மொழிக்கும் சரியான மதிப்பினை செய்துள்ளார்.

இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து. அதனை கூடி உண்போம். திணிக்க நினைத்தால் குமட்டி விடும். தயவுசெய்து அதனை செய்யாதீர்கள். வேற்றுமையில் ஒற்றுமையை எங்களால் காண இயலும். வாழிய செந்திமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழ்க பாத மணித்திருநாடு என, தன்னுடைய வீடியோவில் பேசியுள்ளார்.

HOT NEWS