மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், வருகின்ற சட்டமன்றத் தேர்தலினை ஒட்டி டிசம்பர் 13ம் தேதி முதல் ஏழு மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செய்ய உள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியானது, தற்பொழுது வருகின்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முழுமையாகத் தயாராகி வருகின்றது. இந்தத் தேர்தலில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட, அதிக வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என, அக்கட்சியினர் மும்முரமாக வேலை செய்து வருகின்றனர். பிக்பாஸ், இந்தியன் 2, விக்ரம் ஆகியப் படங்களில் தற்பொழுது மும்முரமாக ஈடுபட்டு வருகின்ற கமல்ஹாசன் தற்பொழுது கட்சி வேலைகளிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்.
கட்சிக்கு மாவட்டம் வாரியாக மட்டுமில்லாமல், ஒவ்வொரு வார்டுக்கும் தேவையான ஆட்களையும், கட்சி நிர்வாகிகளையும் நியமித்து வருகின்றார். அதே போல், தேர்தலை சந்திக்கத் தேவையான அணிகளையும் அவர் உருவாக்கி வருகின்றார். இந்த சூழலில் அவர் தேர்தல் பரப்புரைப் பற்றி ஒரு தகவலானது வெளியாகி உள்ளது. அதில், சீரமைப்போம் தமிழகம் என்ற பெயரில் இந்தப் பயணமானது வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்தப் பயணத்தின் பொழுது, சுமார் ஏழு தமிழக மாவட்டங்களுக்கு வேகமான சூராவளி சுற்றுப் பயணத்தினை கமல்ஹாசன் செய்ய திட்டமிட்டு உள்ளார்.
இந்தப் பயணத்தினை வருகின்ற டிசம்பர் 13ம் தேதி முதல், மதுரையில் துவங்குகின்றார். 14ம் தேதி மதுரை மற்றும் தேனியிலும், 15ம் தேதி அன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் 18ம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலும் தன்னுடையப் பயணத்தினையும், பிரச்சாரத்தையும் செய்கின்றார். இதில் அவர் மக்களை சந்தித்து தெருமுனைக் கூட்டங்களிலும் அவர் பேசுவார் என திட்டமிடப்பட்டு உள்ளது.