ட்ரெய்லர் வெளியாகி, கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, படம் எப்படியோ வந்துவிட்டது. முதலில் அதற்குப் பாராட்டுக்கள். இன்று உலகமெங்கும், ஜீவா, நிக்கி கல்ரானி நடிப்பில் உருவான கீ திரைப்படம் வெளியாகியுள்ளது.
இந்தத் திரைப்படத்தினை இயக்குநர் காளீஸ் இயக்கியுள்ளார். ஆரம்பம் படம் வெளியானதில் இருந்து, ஹேக்கிங், டெக்னாலஜி சம்பந்தப்பட்ட படங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அதில் அதிக வரவேற்ப்பைப் பெற்றது இரும்புத்திரை. இந்தப்படம் அதற்கு முன்பே வெளியாக வேண்டியது. காலத்தின் கொடுமை, தற்பொழுது வெளியாகி உள்ளது.
படத்தில் ஹேக்கரராக வலம் வருகிறார் நடிகர் ஜீவா. கல்லூரிக் காலம் தொட்டே, ஹேக்கரராக இப்படத்தில் நடித்துள்ளார். ஒரு கல், ஒரு கண்ணாடி படத்தில் நாம் எப்படி ஜீவாவைப் பார்த்தோமோ, அதே ஜீவாவை இப்பொழுதும் பார்க்க முடிகிறது. அதே இளமை. அதே துடிப்பு. இப்படத்தில், தன்னுடையப் பங்கினை சிறப்பாக ஆற்றியுள்ளார்.
இவருடைய ஹேக்கிங் திறமைக்காக, படத்தில் விருதுகளும் வழங்கப்படுகின்றன. திடீரென ஒரு விபத்தில், இவருடைய அப்பாவைக் கொல்ல முயற்சிக்கிறார்கள். அப்பொழுது, அவருடைய தோழி அனைகா அதற்கு முன் உன் உயிருக்கு ஆபத்து என எச்சரிக்கிறார். இது ஜீவாவிற்கு ஞாபகம் வருகிறது. இதனையடுத்து, தன் தோழியைக் காண செல்கிறார். அவர் ஒரு சாலை விபத்தில் இறந்து விடுகிறார். யார் ஜீவாவைக் கொல்ல முயற்சிக்கிறார்கள், ஜீவா என்ன ஆனார். கொலைகாரர்களைப் பழித் தீர்த்தாரா? என்பது தான் மீதிக் கதை.
படத்தில், ஹா ஹா ஹாசினிப் போல, நிக்கி கல்ரானி நடித்திருக்கிறார். இன்னும் எத்தன ஜெனிலியாவத் தான், தமிழ் சினிமாத் தரப் போகுதோ? நிக்கி கல்ரானி சைஸ்க்கு, அவங்களுக்கு இந்தக் கேரக்டர் செட் ஆகல! இருப்பினும், தன்னுடைய அழகான நடிப்பை, வழக்கம் போல வெளிப்படுத்தி இருக்காங்கன்னு, சொல்லலாம்.
படத்தில், கேரள நடிகர் கோவிந்த் நடித்துள்ளார். அவரால் முடிந்த அளவு, தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவர் உண்மையான ஹேக்கரைப் போலவே காட்சியளிக்கிறார்.
இயக்குநர் உண்மையில், சொல்ல வந்ததை மறந்துவிட்டு, வேறொன்றை சொல்லும் விதத்தில் இந்தப் படத்தை முடித்திருக்கிறார். எப்படியோ கிளைமேக்ஸ் காட்சியில், மீண்டும் கதைக்குள் வந்துவிட்டார். படத்தில், தவிர்த்திருக்க வேண்டிய விஷயமாக அனைவராலும் கருதப்படுவது, காதல் காட்சிகள் மட்டுமே. ஒரு வேளை இந்தக் காதல் காட்சிகள் இல்லாமல் இருந்தால், கண்டிப்பாக இந்தப்படமும், இரும்புத்திரையைப் போல மாபெரும் வெற்றிப்படமாக இருக்கும் என்பதில், எவ்வித ஐயமும் இல்லை.
திரைக்கதை சுமார் ரகம். விஷூவல் எப்பக்டஸ் படத்திற்கு தேவையான அளவிற்கு, சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆக மொத்தம் கீ லாக்காகி இருச்சு.