23 குழந்தைகளை சிறைபிடித்தவரை சுட்டுக் கொன்ற உபி பாதுகாப்புப் படை! ஏன் தெரியுமா?

31 January 2020 அரசியல்
childskidnapped.jpg

உத்திரப்பிரதேசத்தில் 15 வயதிற்குட்பட்ட, 23 குழந்தைகளை சிறைபிடித்த நபரை பாதுகாப்புப் படையினர் 8 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சுட்டுக் கொன்றனர்.

உத்திரப் பிரதேச மாநிலம், பரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள கசாரியா கிராமத்தினைச் சேர்ந்தவர் சுபாஷ் பதாம். இவர், தனது மகளின் பிறந்தநாளினை கொண்டாடும் பொருட்டு, அப்பகுதியில் உள்ள 15 வயதிற்குட்பட்ட 23 குழந்தைகளை அழைத்துள்ளார். அங்கு பின்னர், தன் கையில் வைத்திருந்த துப்பாக்கி மூலம், அந்தக் குழந்தைகளை மிரட்டி அமர வைத்துள்ளார்.

விஷயம் தெரிந்த அந்தக் கிராமத்தினர், அந்தக் குழந்தைகளை மீட்க போலீசிற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, அங்கு விரைந்த போலீசார் பதாமிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், அவர் எதற்கும் ஒத்து வராததால் அவரிடம் இருந்து, குழந்தையை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

இருப்பினும், தன்னுடைய கையில் வைத்திருந்த துப்பாக்கியால் அவர் கண்மூடித் தனமாக சுட ஆரம்பித்தார். இதனை போலீசார் எதிர்பார்க்கவில்லை. அவர் சுட்டதில், இரண்டு காவலர்களும், ஒரு கிராமத்தவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்தப் பிரச்சனையை அடுத்து, தேசிய பாதுகாப்புப் படைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தேசியப் பாதுகாப்புப் படையினர், முதலில் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர் எதற்கும் சம்மதிக்காததால், அவரைச் சுட்டுக் கொன்றனர். பின்னர், அங்கிருந்த 23 குழந்தைகளையும் மீட்டனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், தற்பொழுது தான் கொலை வழக்கில் ஜாமீன் பெற்று, சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார் எனவும் தெரிய வந்தது.

இதனிடையே, குழந்தைகளை வெற்றிகரமாக மீட்ட, பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினருக்கு 10 லட்ச ரூபாயினை, உத்திரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

HOT NEWS